பூட்டானை சேர்ந்த 22 வயது சோனம் யேஷே, சர்வதேச ஆடவர் டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பவுலராக உலகசாதனை படைத்துள்ளார். மியான்மர் அணியை எதிர்த்து நடந்த போட்டியில், 4 ஓவர்களில் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் சில அபூர்வ சாதனைகளை எல்லாம் குட்டி குட்டி கிரிக்கெட் நாட்டின் வீரர்களே வைத்துள்ளனர். உதாரணத்திற்கு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்த வீரராக நேபாளத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரரே உள்ளார்.
2007ஆம் ஆண்டு யுவராஜ் சிங் படைத்திருந்த 12 பந்தில் அரைசதம் என்ற உலகசாதனையை, கடந்த 2023ஆம் ஆண்டு நேபாள் வீரர் திபேந்திர சிங் 9 பந்தில் அரைசதமடித்து முறியடித்தார்.
அதேபோல ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளராக இந்தோனேசியா பவுலர் கெடே பிரியந்தனா சமீபத்தில் உலகசாதனை படைத்தார்.
அந்தவகையில் தான் சர்வதேச ஆடவர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் 8 விக்கெட் வீழ்த்திய முதல் பவுலராக உலக சாதனை படைத்துள்ளார் பூட்டானை சேர்ந்த சோனம் யேஷே என்ற 22 வயது வீரர்.
பூட்டானுக்கு சுற்றுப்பயணம் செய்திருந்த மியான்மர் அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் 5 போட்டிகளையும் வென்று டாமினேட் செய்த பூட்டான் அணி 5-0 என தொடரை கைப்பற்றி அசத்தியது. இன்று நடந்த கடைசி டி20 போட்டியில் 84 ரன்கள் வித்தியாசத்தில் மியான்மரை வீழ்த்தியது பூட்டான் அணி.
கடந்த டிசம்பர் 26ஆம் தேதி நடைபெற்ற 3வது டி20 போட்டியில் மியான்மரை 45 ரன்னுக்கு சுருட்டிய பூட்டான் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அந்தப்போட்டியில் 4 ஓவர்களை வீசிய பூட்டானை சேர்ந்த 22 வயது இடதுகை ஸ்பின்னரான சோனம் யேஷே 7 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதுவரை ஆண்கள் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் 7 விக்கெட்டுகள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தநிலையில், 8 விக்கெட்டுகளை வீழ்த்திய சோனம் யேஷே உலகசாதனை படைத்தார்.