இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. தொடரை வெல்லும் அணிக்கு முதல் ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை வழங்கப்படும்.
3 போட்டிகள் முடிவில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ள நிலையில், 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 358 ரன்கள் குவித்த நிலையில், தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 669 ரன்கள் குவித்துள்ளது. சிறப்பாக பேட்டிங் செய்த ஜோ ரூட் 150 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 141 ரன்கள் அடித்து அசத்தினர்.
இந்தியாவிற்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய பென் ஸ்டோக்ஸ், 14வது டெஸ்ட் சதத்தையும் பதிவுசெய்து அசத்தினார்.
இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன், சதமும் அடித்த முதல் இங்கிலாந்து கேப்டனாக பிரமாண்ட சாதனை படைத்தார். இதற்கு முன்பு 1983-ம் ஆண்டு பாகிஸ்தான் கேப்டன் இம்ரான் கான் இந்தியாவிற்கு எதிராக இச்சாதனையை படைத்திருந்த நிலையில், 42 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நிகழ்த்தி காட்டியுள்ளார் பென் ஸ்டோக்ஸ்.
டெஸ்ட் போட்டியில் 5 விக் + 100 ரன்கள் அடித்த கேப்டன்கள்:
1955 - டெனிஸ் அட்கின்சன் (WI) vs AUS, பிரிட்ஜ்டவுன்
1966 - கேரி சோபர்ஸ் (WI) vs ENG, லீட்ஸ்
1977 - முஷ்டாக் முகமது (PAK) vs ENG, போர்ட் ஆஃப் ஸ்பெயின்
1983 - இம்ரான் கான் (PAK) vs IND, பைசலாபாத்
2025 - பென் ஸ்டோக்ஸ் (ENG) vs IND, மான்செஸ்டர்
இன்றைய இந்தியாவிற்கு எதிரான போட்டியில் சதமடித்த பென் ஸ்டோக்ஸ், டெஸ்ட் கிரிக்கெட்டில் 7000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.
இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 7000 ரன்களுடன், 200 விக்கெட்டை வீழ்த்திய 3வது உலக கிரிக்கெட்டராக சாதனை படைத்தார் பென் ஸ்டோக்ஸ்.
டெஸ்ட்டில் 7000 ரன்கள் + 200 விக்கெட் வீழ்த்திய வீரர்கள் :
* கேரி சோபர்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்) - 8032 ரன்கள் & 235 விக்கெட்டுகள்
* ஜாக் காலிஸ் (தென்னாப்பிரிக்கா) - 13289 ரன்கள் & 292 விக்கெட்டுகள்
* பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து) - 7000* ரன்கள் & 229 விக்கெட்டுகள்