இந்திய வீரர்களுக்கு 10 புதிய கட்டுப்பாடுகளை பிசிசிஐ விதித்துள்ளது. அதன்பேரில், வர இருக்கும் துலீப் கிரிக்கெட் தொடரில் சில வீரர்கள் தேர்வு செய்யப்படவில்லை எனத் தெரிகிறது. ஆகையால் அவர்களை கட்டாயம் விளையாட வைக்க வேண்டும் என மாநில சங்கங்களுக்கு பிசிசிஐ கடிதம் எழுதியுள்ளது. இதுகுறித்த கட்டுரையை இங்கு படிக்கலாம்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டிராபியை இந்திய அணி, கடந்த ஆண்டு இழந்ததைத் தொடர்ந்து, அவ்வணி மீது நிறைய விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து அதிருப்தி அடைந்த பிசிசிஐ, வீரர்களுக்கு 10 புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. அதில், அனைத்து வீரர்களும் உள்நாட்டு கிரிக்கெட்டில் கட்டாயம் விளையாட வேண்டும் என்பதும் ஒன்று. இதையடுத்து ஸ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப், முகமது ஷமி உள்ளிட்ட வீரர்கள், கட்டாயம் உள்நாட்டுப் போட்டிகளில் விளையாட வைக்கப்பட்டனர். இந்த நிலையில், வர இருக்கும் துலீப் கிரிக்கெட் தொடரில் சில வீரர்கள் தேர்வு செய்யப்படவில்லை எனத் தெரிகிறது.
இதையடுத்து, அவர்களைத் தேர்வு செய்யுமாறு மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு பிசிசிஐ கடிதம் எழுதியுள்ளது. முகமது சிராஜ் மற்றும் கே.எல்.ராகுல் போன்ற சிறந்த வீரர்களை தென் மண்டலம் வரவிருக்கும் துலீப் டிராபிக்கு தேர்வு செய்யாததை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் படி, ’மத்திய ஒப்பந்த கிரிக்கெட் வீரர்களைத் தேர்வு செய்யாதது குறித்து BCCI சில கிரிக்கெட் சங்கங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. தென் மண்டலத்தில் வாஷிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா மற்றும் சாய் சுதர்சன் போன்றவர்களும் சேர்க்கப்படவில்லை. வலுவான அணிகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் துலீப் டிராபிக்கு விரும்பிய மரியாதை அளிக்குமாறு BCCIயின் பொது மேலாளர் (கிரிக்கெட் செயல்பாடுகள்) அபே குருவில்லா மாநில சங்கங்களைக் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. அதன் கௌரவத்தை நிலைநிறுத்தி, போட்டியின் மிக உயர்ந்த தரத்தை உறுதி செய்ய, அனைத்து இந்திய வீரர்களும் அந்தந்த மண்டல அணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவது கட்டாயமாகும் என அவர் தெரிவித்ததாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
எந்தவொரு வீரரும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க விரும்பவில்லை என்றால் அவர்கள் பரிசீலிக்கப்பட மாட்டார்கள்பிசிசிஐ
மேலும், ’டீம் இந்தியாவுக்கான தேர்வுக்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் அனைத்து வீரர்களும், ஒப்பந்தம் செய்யப்பட்ட அல்லது வேறுவிதமாக, பிசிசிஐ நடத்தும் உள்நாட்டு போட்டிகளில் பங்கேற்க வேண்டும். எந்தவொரு வீரரும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க விரும்பவில்லை என்றால் அவர்கள் பரிசீலிக்கப்பட மாட்டார்கள்’ என அந்த மின்னஞ்சலில் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அறிக்கையின்படி, சில மாநில சங்கங்கள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் துலீப் அல்லது தியோதர் டிராபிக்கு பதிலாக இந்தியா ஏ அல்லது வாரியத் தலைவர் லெவன் அணிக்காக விளையாட வேண்டும் என்று கருதுகின்றன.