ரோகித் சர்மா web
கிரிக்கெட்

’ரோகித்துக்கு கடைசி போட்டி என்பது வதந்தி..’ முற்றுப்புள்ளி வைத்த பிசிசிஐ செயலாளர்!

ரோகித் சர்மாவிற்கு நாளை நடைபெறும் லார்ட்ஸ் ஒருநாள் போட்டியே கடைசி போட்டி என்று பரவிய செய்திகளுக்கு மத்தியில், அது அவருடைய கடைசி போட்டியாக இருக்காது என்று பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா மறுத்துள்ளார்.

Rishan Vengai

ரோகித் குறித்த வதந்திகளை பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா மறுத்து, ரோகித் சர்மாவின் எதிர்காலம் குறித்து எந்த விவாதமும் இல்லை, லார்ட்ஸ் போட்டி அவரது கடைசி அல்ல என்று தெளிவுபடுத்தினார்.

இந்திய கிரிக்கெட்டின் ‘ஹிட் மேன்’ என அழைக்கப்படும் ரோஹித் சர்மா எண்ணற்ற சாதனைகளுக்குச் சொந்தக்காரராக விளங்குகிறார். தவிர, உலகக்கோப்பையை வென்று தந்த கேப்டன்கள் வரிசையிலும் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துள்ளார். உலகக்கோப்பை வென்று தந்ததற்குப் பிறகு, அவர் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அதேநேரத்தில், அடுத்த உலகக்கோப்பைக்குக் கவனம் செலுத்தும் நோக்கில், ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்திவந்தார். இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ள ரோகித் சர்மா, முதல் இரண்டு போட்டிகளிலும் பெரிய அளவில் ரன்களைக் குவிக்கவில்லை. இது, ரசிகர்களுக்கும் பிசிசிஐக்கும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது.

ரோகித் சர்மா

இதற்கிடையே, 2027 ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்காக ரோகித்திற்கு பதிலாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரரை அணியில் சேர்க்க தேர்வுக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், அதனால் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் 3வது ஒருநாள் போட்டியே ரோகித்திற்கு கடைசி போட்டியாக இருக்கும் என தகவல் பரவியது.

இந்தசூழலில் தான் இதுவெறும் வதந்தி என்று கூறியிருக்கும் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா, ரோகித் இந்திய அணியின் முக்கியமான வீரர் என்றும் கூறியுள்ளார்.

பரவிய வதந்திகளுக்கு மத்தியில் பிடிஐ உடன் பேசியிருக்கும் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா, “ரோகித் சர்மாவின் எதிர்காலம் குறித்து ஊடகங்களில் பல யூகங்கள் பரவி வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை லார்ட்ஸில் நடைபெறும் போட்டியே அவருடைய கடைசிப் போட்டியாக இருக்கும் என்று எந்த விவாதமும் நடைபெறவில்லை என்பதை நான் உறுதியாகக் கூற விரும்புகிறேன். ரோகித் இந்திய ஒருநாள் அணியின் ஒரு நிரந்தர உறுப்பினராவார். அவர் அணியில் இருக்கும் வரை, நாட்டிற்காக தொடர்ந்து விளையாடுவார். வேறுவிதமாகக் கூறினால், லார்ட்ஸ் ஒருநாள் போட்டி அவரது கடைசிப் போட்டியாக இருக்காது" என தெளிவுபடுத்தியுள்ளார்.