ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பதிலடி கொடுத்தது.
இந்த மோதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இருநாட்டு உறவிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், இருதரப்பிலான கிரிக்கெட் தொடர்களும் இனி நடைபெறாது எனக் கூறப்பட்டது. இதன் காரணமாக, நடப்பாண்டு ஆசியக் கோப்பை திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்விகளும் எழுந்தன.
ஆனால் திட்டமிட்டப்படி ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர, இந்த தொடரில் ஒரே பிரிவில் இந்தியாவும் பாகிஸ்தானும் இடம்பெற்றுள்ளன. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து அரசியல் கட்சிகள் சார்பில் பல்வேறு எதிர்ப்புகள் வெளியான நிலையில், மனோஜ் திவாரி, கேதார் ஜாதவ் போன்ற பல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடுவதற்கு தொடர்ந்து எழுப்புகள் இருந்துவரும் நிலையில், பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா மவுனம் கலைத்துள்ளார்.
2025 ஆசியக்கோப்பை தொடரானது டி20 வடிவத்தில் செப்டம்பர் 9 முதல் செப்டம்பர் 28 வரை நடைபெறவிருக்கிறது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஹாங்ஹாங், ஓமன் முதலிய 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், இந்தியா, பாகிஸ்தான், யுஏஇ, ஓமன் முதலிய அணிகள் ஏ பிரிவிலும், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் முதலிய அணிகள் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டு அணிகள் துபாய் மைதானத்தில் செப்டம்பர் 14 அன்று மோதவிருக்கும் நிலையில், அதிகப்படியான எதிர்ப்பு இருந்துவருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுவது குறித்து பேசியிருக்கும் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா, “பி.சி.சி.ஐ பொறுத்தவரை, மத்திய அரசு எதை முறைப்படுத்துகிறதோ அதை நாங்கள் பின்பற்ற வேண்டும். சமீபத்திய மத்திய அரசின் வழிகாட்டுதல் படி, எந்தவொரு பன்னாட்டு தொடரிலும் நட்புறவு இல்லாத நாடுகளுக்கு எதிராக இந்தியா விளையாடலாம். இருதரப்பு தொடர்களில் மட்டுமே நட்புற்வு இல்லாத நாடுகளுக்கு இடையே விளையாடக்கூடாது.
ஆசியக் கோப்பை என்பது ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த நாடுகள் பங்கேற்கும் பன்னாட்டுப் போட்டி என்பதால், நாங்கள் பங்கேற்க வேண்டும். அதேபோல், எந்தவொரு ஐ.சி.சி போட்டியிலும், இந்தியாவுடன் நல்லுறவு இல்லாத ஒரு நாடு பங்கேற்றாலும், நாங்கள் விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இருதரப்பு உறவுகளைப் பொறுத்தவரை, நாங்கள் எந்த விரோத நாட்டிற்கும் எதிராகவும் விளையாடப் போவதில்லை” என்று சைகியா வெளிப்படையாக பேசியுள்ளார்.