”மக்கள் கொல்லப்பட்டதை மறந்துவிட்டனர்; INDvPAK போட்டிகளை பார்க்க மாட்டேன்” - முன்னாள் வீரர் வேதனை..!
பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களை அனைவரும் மறந்துவிட்டார்கள் என்றும், நம் மக்களின் உயிருக்கு மதிப்பு வெறும் பூஜ்ஜியம் தானா என்றும் முன்னாள் இந்திய வீரர் மனோஜ் திவாரி வேதனை தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பதிலடி கொடுத்தது.
இந்த மோதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இருநாட்டு உறவிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், இருதரப்பிலான கிரிக்கெட் தொடர்களும் இனி நடைபெறாது எனக் கூறப்பட்டது. இதன் காரணமாக, நடப்பாண்டு ஆசியக் கோப்பை திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்விகளும் எழுந்தன.
இந்நிலையில், திட்டமிட்டப்படி ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர, இந்த தொடரில் ஒரே பிரிவில் இந்தியாவும் பாகிஸ்தானும் இடம்பெற்றுள்ளன. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து பல்வேறு எதிர்ப்புகள் வெளியான நிலையில், தற்போது முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரியும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
நம் மக்கள் உயிரின் மதிப்பு வெறும் பூஜ்ஜியமா..
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டு அணிகள் துபாய் மைதானத்தில் செப்டம்பர் 14 அன்று மோதவிருக்கின்றன. இந்த சூழலில் பாகிஸ்தான் உடன் எதற்காக விளையாட வேண்டும், நம் மக்களின் உயிரை விட விளையாட்டு ஒன்றும் முக்கியமில்லை என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசியிருக்கும் மனோஜ் திவாரி, “இந்தியா - பாகிஸ்தான் இடையே ஆசியக்கோப்பை போட்டி நடக்கப் போவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. பஹல்காம் தாக்குதலின் போது, பல அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த முறை பாகிஸ்தானுக்கு எதிராக அனைத்து விதத்திலும் பதிலடி கொடுப்போம் என்ற நிறைய பேச்சுக்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. ஆனால் இப்படியான சூழலில் சில மாதங்களுக்குப் பிறகு, எல்லாவற்றையுமே மறந்துவிட்டனர். இந்தப் போட்டி நடக்கிறது என்பதை நம்புவது எனக்கு கடினமாக உள்ளது, ஒரு மனித உயிரின் மதிப்பு வெறும் பூஜ்ஜியமாக இருக்கிறது.
பாகிஸ்தானுடன் விளையாடுவதன் மூலம் அவர்கள் என்ன சாதிக்க விரும்புகிறார்கள்? ஒரு மனித உயிரின் மதிப்பு விளையாட்டை விட அதிகம் கிடையாது. நான் இந்தப்போட்டியை பார்க்க போவதில்லை" என்று வேதனை உடன் கூறியுள்ளார்.