இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணிக்கு தோனி ஆலோசகராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது தொடர்ச்சியான மாற்றங்களை சந்தித்து வருகிறது. அணியின் எதிர்கால திட்டங்களைக் கருத்தில் கொண்டு, முற்றிலும் இளம் வீரர்களைக் கொண்ட அணியாக உருமாற்றம் செய்யப்படுகிறது. கேப்டன்கள் மாற்றம் உட்பட பல்வேறு துணிச்சலான முடிவுகளையும் பிசிசிஐ எடுத்து வருகிறது. அந்தவழியில்தான், தோனி இந்திய அணிக்கான வழிகாட்டியாக மீண்டும் நியமிக்கப்பட இருப்பதாக செய்தியும் வந்திருக்கிறது.
2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி என மூன்று ஐசிசி கோப்பைகளை வென்று தந்த ஒரே இந்திய கேப்டனாக தோனி போற்றப்படுகிறார். 2020ஆம் ஆண்டே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வுபெற்றபோதிலும், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு இந்திய அணிக்கான ஆலோசராக தோனி நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த வாய்ப்பை தோனி ஏற்றுக்கொண்டால், இரண்டாவது முறையாக இந்திய அணிக்கு வழிகாட்டியாக செயல்படுவார். இதற்கு முன், 2021ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு ஆலோசகராக இருந்தார்.
அப்போது விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாகவும், ரவி சாஸ்திரி பயிற்சியாளராகவும் செயல்பட்டனர். அப்போது, பாகிஸ்தானிடம் முதல் முறையாக தோல்வியடைந்தது, லீக் சுற்றிலேயே வெளியேறியது உட்பட, இந்திய அணியின் ஆட்டம் ஏமாற்றமளிக்கும் வகையிலேயே இருந்தது. இதனையடுத்து விராட், ரவி சாஸ்திரி என இருவரும் தங்களது பதவிகளில் இருந்து விலகினர்.
இந்த நிலையில், மீண்டும் இந்திய டி20 அணியின் ஆலோசகராக தோனி மீண்டும் நியமிக்கப்படலாம் என்ற செய்தி வந்திருக்கிறது.
இதுதொடர்பாக இந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கருத்து தெரிவித்திருக்கிறார். அவர் கூறுகையில், “அவர் என்ன தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பதைக் கணிப்பது மிகவும் கடினம். ஒரு கேப்டனாகவும் வீரராகவும் அவரது அனுபவம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில், இன்று வளர்ந்து வரும் புதிய வீரர்களும் இந்திய அணியின் இளம் நட்சத்திரங்களும் அவருக்கு மிகுந்த மரியாதை அளிக்கிறார்கள். தோனி – கம்பீர் கூட்டணி நிச்சயமாகக் கவனிக்கத்தக்கதாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கவுதம் காம்பீர் உள்ள நிலையில், தோனிக்கும் அவருக்கும் இடையிலான உறவு பல ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது. 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கைக்கு எதிராக வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்த ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு மறக்கமுடியாத கூட்டணியை அமைத்திருந்தது. எனினும், ஆலோசகர் ஆவது குறித்த தகவலை தோனியோ அல்லது பிசிசிஐயோ உறுதிப்படுத்தவில்லை.