2018 யு-19 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த பிரித்வி ஷா, தன்னுடைய சிறப்பான கேப்டன்சி மற்றும் பேட்டிங்கின் மூலம் இந்தியாவிற்கு கோப்பை வென்று கொடுத்தார். தொடர் முடிந்த அடுத்து 8 மாதங்களுக்குள் இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைத்தது. 18 வயதில் அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம். இந்தியாவிற்கு கிடைத்த அடுத்த முத்தான பேட்ஸ்மேன் என கிரிக்கெட் ரசிகர்கள் உச்சி முகர்ந்தனர்.
ஆனால், 2019 ஊக்கமருந்து சோதனையில் அவர் சிக்கியதற்கு பிறகு நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது. அவர் இருமலுக்கு சாப்பிட்ட மருந்தில் செயல்திறனை மேம்படுத்தும் ட்ரக் கலந்திருப்பது தெரியவந்ததால், அவருக்கு 8 மாதங்கள் விளையாட தடை விதித்தது பிசிசிஐ.
அதற்குப் பின்னரும் ஒழுக்கமின்மை, காயம், பிட்னஸ் பிரச்னை என பல்வேறு காரணங்களால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. 2021ஆம் ஆண்டு இலங்கை தொடரில் பங்கேற்காத அவர், 2022ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான இந்திய டி20 அணியில் இடம்பிடித்தார். ஆனாலும் அவருக்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை. மும்பை கிரிக்கெட் சங்கம் கூட தகுதியற்றவர் என ரஞ்சி டிராபி அணியில் இருந்து அவரை நீக்கி இருந்தது.
தற்போது ஐபிஎல் ஏலத்தில் ரூ.75 லட்சம் எனும் மிகக் குறைவான விலைக்கு ஏலத்திற்கு வந்திருந்தாலும், எந்த அணியாலும் வாங்கப்படாமல் unsold ப்ளேயராக மாறியுள்ளார். 2018 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 7 ஆண்டுகள் டெல்லி அணிக்காக விளையாடிய ப்ரித்வி ஷா unsold ஆவார் என்பது யாரும் எதிர்பாராத ஒன்று.
கிரிக்கெட்டில் இருக்கும் ஃபார்ம் என்பதைத் தாண்டி உடற்தகுதி, அவரது நடத்தைகள் என பலவற்றிலும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களால் கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார் ப்ரித்வி ஷா.
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் முன்னாள் உதவி பயிற்சியாளராக இருந்த முகம்மது கைஃப், “ப்ரித்வி ஷா ஏலத்தில் எடுக்கப்படாதது வெட்கக்கேடானது. அவர் தனது நற்பெயரை மீண்டும் சம்பாதிக்கும் முயற்சியில் மீண்டும் உள்நாட்டு கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும். ப்ரித்வி ஷாவிற்கு ரிக்கி பாண்டிங் பயிற்சியின் கீழ் கிடைத்த வாய்ப்புகள் வேறு யாருக்கும் கிடைக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்திய அணியின் தேர்வாளராக இருந்த முன்னாள் செலக்டர் ஒருவர் ப்ரித்வி ஷாவை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக பிடிஐயிடம் பேசிய அவர், “ப்ரித்வி ஷா டெல்லி கேப்பிடல்ஸில் விளையாடியுள்ளார். ரிக்கி பாண்டிங், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட்டுடன் அவருக்குப் பழக வாய்ப்பு கிடைத்தது. சச்சின் ப்ரித்வி ஷாவுடன் பேசியதும் ஊரறிந்த ரகசியம். இவர்கள் எல்லாம் முட்டாள்களா? இவர்கள் கூறியதற்குப் பின்பாகவாவது ப்ரித்வி ஷாவிடம் எதாவது மாற்றம் இருந்ததா? அப்படியே எதாவது இருந்திருந்தாலும் அது வெளிப்படையாகத் தெரியவில்லை” என கடுமையாக விமரிசித்துள்ளார்.
ப்ரித்வி ஷா இதுவரை 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 339 ரன்களை எடுத்துள்ளார். 6 ஒருநாள் போட்டிகளில் 189 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் 79 போட்டிகளை விளையாடியுள்ள அவர் 1892 ரன்களை எடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.