rohit sharma wants to win odi world cup web
கிரிக்கெட்

சிதைந்ததா ரோகித்தின் வாழ்நாள் லட்சியம்..? கனவுக்கோட்டையை உடைத்த BCCI!

எனக்கு உலகக்கோப்பை என்றால் ஒருநாள் உலகக்கோப்பை மட்டும் தான், அதைத்தான் சிறுவயதில் நான் கனவுகண்டேன், என் கிரிக்கெட் பயணமும் அதை நோக்கித்தான் இருந்தது என்று ஒருமுறை ரோகித் சர்மா உணர்ச்சிபொங்க தெரிவித்திருந்தார்.

Rishan Vengai

2027 ஒருநாள் உலகக்கோப்பையை வெல்லவேண்டும் என்ற ரோகித் சர்மாவின் கனவை உடைத்ததா பிசிசிஐ?

இந்திய கிரிக்கெட் அணி இதுவரை பார்த்த கேப்டன்களில் ரோகித் சர்மாவின் பெயர் தனித்தே நிற்கிறது. அவர் சக வீரர்களுடன் அணுகும்முறை, அணியை கட்டமைக்கும் முறை மற்றும் அணிக்காக கோப்பை வெல்லவேண்டும் என்ற முன்னெடுப்பு என அனைத்து பாக்ஸ்களையும் வெற்றிகரமாக டிக்செய்துள்ளார். அதனால் தான் 11 வருடங்களாக கோப்பைக்காக காத்திருந்த இந்திய அணியால் 8 மாதங்களுக்குள் 2 ஐசிசி கோப்பைகளை வெல்லமுடிந்தது.

ரோகித் சர்மா

ஒருமுறை ரோகித் சர்மாவிடம் உங்களுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் மிகப்பெரிய லட்சியம் எது என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ‘இந்திய அணிக்காக கோப்பை வெல்லவேண்டும் என்பது தான் என்னுடைய லட்சியம். நீங்கள் நிறைய இரட்டை சதங்கள் அடிக்கலாம், மலைபோல் ரன்களை வாரிக்குவிக்கலாம், ஆனால் நீங்கள் ஓய்வுபெற்றபிறகு உங்களிடம் கோப்பை இருந்ததா இல்லையா என்பதை தான் காலம் நினைவில் கொள்ளும். என்னைப்பொறுத்தவரை தனிப்பட்ட சாதனையை விட, ஓய்வுபெற்ற பிறகு இந்திய அணியின் கேப்டனாக எத்தனை கோப்பைகளை வைத்திருக்கிறேன் என்பதே பெரிய விசயம்’ என்று கூறியிருந்தார்.

அதன்படி 2023 ஒருநாள் உலகக்கோப்பையை இந்தியாவிற்காக வெல்லவேண்டும் என்ற வேட்கையில் இருந்த ரோகித் சர்மா அதை நூலிழையில் தவறவிட்டார். ஆனால் ஒருநாள் உலகக்கோப்பையை விட்டாலும் 2024 டி20 உலகக்கோப்பை, 2025 சாம்பியன்ஸ் டிராபி என 2 ஐசிசி கோப்பைகளை அடுத்தடுத்து கேப்டனாக வென்ற ரோகித் சர்மா, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென தனி பெயரை சம்பாதித்து கொண்டார்.

கபில்தேவ், தோனி, ரோகித் சர்மா

கபில்தேவ், மகேந்திர சிங் தோனிக்கு பிறகு 2 கோப்பைகளுடன் சிம்மாசனமிட்டுள்ள கேப்டன் ரோகித்தின் கோப்பை-வேட்கை 2 கோப்பைகளுடன் நின்றுவிடவில்லை. அதனால் தான் கோப்பை வென்றபிறகான செய்தியாளர் சந்திப்பில் ‘நான் இங்கிருந்து எங்கும் ஓடிவிடவில்லை, வெள்ளை பந்து கிரிக்கெட்டில் விளையாடப்போகிறேன்’ என 2027 ஒருநாள் உலகக்கோப்பைக்காக தயாராகப்போகிறேன் என்பதை சொல்லாமல் சொன்னார் ரோகித் சர்மா.

ஆனால் அவரின் கோப்பைக்கனவை உடைக்கும் செயலில் பிசிசிஐ-ம், இந்திய அணியின் தேர்வுக்குழுவும் இறங்கியுள்ளது. வயதுமூப்பு, ஃபிட்னஸ் என்ற குறையை சுட்டிக்காட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதனால் தான் ரோகித்தும், விராட்டும் 2027 உலகக்கோப்பை குறித்து எந்த உறுதியும் கொடுக்கவில்லை என்று அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஒருநாள் உலகக்கோப்பை வெல்வதை வாழ்நாள் லட்சியமாக கருதிய ஒரு வீரன் எப்படி அதை விட்டுக்கொடுத்திருப்பார் என்ற கேள்வி எழுகிறது. அப்படி என்ன ஒருநாள் உலகக்கோப்பைக்கும் ரோகித் சர்மாவிற்கும் இடையேயான பிணைப்பு தனித்துவமானது என்பதை இங்கே பார்க்கலாம்..

கண்ணீர்விட்டு அழுத ரோகித்சர்மா..

2007 டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் நட்சத்திர வீரராக ஜொலித்த ரோகித் சர்மா, 2011 ஒருநாள் உலகக்கோப்பை அணியில் இடம்பெறவில்லை. அவருடைய பேட்டிங்கில் கன்சிஸ்டன்ஸி இல்லை என்பதால் அவருக்கான இடம் மறுக்கப்பட்டு, அவரிடத்தில் விராட் கோலி விளையாடினார். ஆனால் தோனி தலைமையிலான அந்த முடிவு ரோகித் சர்மாவை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது. அதனை செய்தியாளர் சந்திப்பில் பகிரங்கமாக வெளிப்படுத்தியிருந்த ரோகித், பல நேர்காணலில் 2011 உலகக்கோப்பையில் இடம்பெறாத வேதனையை பகிர்ந்துள்ளார்.

rohit sharma

அதனைத்தொடர்ந்து 2019 ஒருநாள் உலகக்கோப்பையில் ஒரே சீசனில் 5 சதங்களுடன் அதிக சதம் அடித்த வீரர் என்ற உலகசாதனையை படைத்த ரோகித் சர்மா, அரையிறுதியில் இந்தியா தோற்றபோது கண்ணீர்விட்டு அழுதார். கண்ணீருடன் நின்றிருந்த அவருடைய முகத்தை இந்திய ரசிகர்களால் எப்போதும் மறக்க முடியாது.

அதேபோல 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் தோல்வியே பெறாமல் 10 போட்டிகளில் வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இந்தியா, சொந்தமண்ணில் ஆஸ்திரேலியாவிடம் கோப்பையை பறிகொடுத்தது. அந்த தருணத்தில் ரோகித் சர்மா முழுவதுமாக உடைந்துபோனார், கலங்கிய கண்களுடன் யாரும் இல்லாத இடத்திற்கு சென்று மறைந்துகொண்டார்.

வாழ்நாள் லட்சியம் ODI உலகக்கோப்பை..

ஒருநாள் உலகக்கோப்பை குறித்து ஒருமுறை பேசியிருந்த ரோகித் சர்மா, எனக்கு உலகக்கோப்பை என்றால் அது ஒருநாள் உலகக்கோப்பை மட்டும் தான், அதைத்தான் சிறுவயதில் நான் கனவுகண்டேன், என் கிரிக்கெட் பயணமும் அதை நோக்கித்தான் இருந்தது என்று உணர்ச்சிபொங்க பேசியிருந்தார்.

ஆனால் தற்போது சிறுவயதுமுதல் கோப்பைக்காக கட்டப்பட்ட ரோகித் சர்மாவின் கனவுக்கோட்டை கலைக்கப்படும் இடத்திற்கு நகர்ந்துள்ளது. இந்திய அணியின் தேர்வுக்குழு ரோகித் சர்மாவின் ஃபிட்னஸில் திருப்தியாக இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. அது அவருடைய ரன்வேகத்தில் பிரச்னையை கொண்டுவருமா என்ற அச்சத்தில் கூட 2027 உலகக்கோப்பையில் ரோகித் சர்மா இருப்பதற்கு செக் வைக்கப்பட்டிருக்கலாம்..

ஆனால் 2023 உலகக்கோப்பையில் பலமுறை சதம் அடிக்கும் வாய்ப்பு இருந்தபோதும் ரோகித் சர்மா அணிக்காகவே விளையாடி விக்கெட்டை இழந்தார். அப்படி இருக்கும் பட்சத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா சதமடித்து தேர்வுக்குழுவுக்கு பதிலடி கொடுக்கவேண்டும் என்பதே ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. ஏனென்றால் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு எப்படி ஒருநாள் வடிவத்தில் ரன்களை அடிக்கவேண்டும் என்பது நன்றாக தெரியும். அதனால் தான் அவர்களின் சராசரி 50-ஐ சுற்றி இருக்கிறது.

ரோகித் சர்மா

ஒருபக்கம் விராட் கோலி அனைத்து கோப்பைகளையும் வென்றுவிட்டார், ஆனால் ரோகித் சர்மா அவருடைய கனவுக்கோப்பையான ஒருநாள் உலகக்கோப்பையுடன் விடைபெறவேண்டும் என்பதே ஒட்டுமொத்த ரசிகர்களின் பிரதான விருப்பமாக இருக்கிறது!