பாகிஸ்தான் வீரர் ஷாகிப்சாதா ஃபர்ஹான் மற்றும் ஹாரிஸ் ராஃப் ஆகியோருக்கு எதிராக ஐசிசியிடம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் புகார் அளித்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றால், எப்போதுமே விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது. ஆனால், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இருநாட்டு கிரிக்கெட் போட்டிகளே வேண்டாம் என்ற நிலைக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. எனினும், முன்னரே பட்டியலிடப்பட்டதைத் தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை தொடரில் இரு அணிகளும் மோதி வருகின்றன. அந்த வகையில் தொடரின் லீக் சுற்று மற்றும் சூப்பர் 4 உள்ளிட்ட பிரிவுகளில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் முதல் அணியாக நுழைந்துள்ளது.
ஏற்கெனவே லீக் சுற்றில் இந்திய அணி வெற்றிபெற்றபோதும், அவ்வணியினருடன் நமது வீரர்கள் கைகுலுக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பாகிஸ்தான் ஐசிசியிடம் புகார் அளித்த நிலையில், அந்த அணி விளையாடும் போட்டிகளில் மட்டும் நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் நீக்கப்பட்டார். இதனால் பிரச்னை சற்றே ஓய்ந்தது என்ற நிலையில், சூப்பர் 4 சுற்றுப் போட்டி மீண்டும் அதை ஆரம்பித்து வைத்துள்ளது. அன்றைய போட்டியின்போது சுப்மன் கில், அபிஷேக் சர்மா, ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ராஃப் போன்ற வீரர்களிடையே வார்த்தை மோதல் ஏற்பட்ட நிலையில், அரைசதமடித்த பாகிஸ்தான் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் செய்த துப்பாக்கி செலப்ரேஷன், ஹாரிஸ் ராஃப் காட்டிய சைகை என கிரிக்கெட் களம் போர்க்களமாக மாறியது.
அதாவது, பாகிஸ்தான் வீரர் ஷாகிப்சாதா ஃபர்ஹான் அரை சதம் அடித்தவுடன் பேட்டை கையில் பிடித்துக்கொண்டு துப்பாக்கியால் சுடுவதுபோல காட்டினார். அதேபோல மற்றொரு பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ராஃப் ஒரு விமானம் பறந்துகொண்டிருப்பது போலவும் திடீரென அது கீழே விழுவது போலவும் சைகை செய்து காட்டினார். மேலும் 6 என்ற எண்ணிக்கையும் அவர் கை விரல்களால் காட்டினார். இந்தியாவின் 6 விமானங்களை ஆபரேஷன் சிந்தூரின்போது வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறிவரும் நிலையில், அதை மறைமுகமாகக் கூறும் வகையில் ஹாரிஸ் ராஃப் செய்ததாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தான் வீரர்களின் இந்தச் செயல்பாடுகள், சமூக வலைதளங்களில் பேசுபொருளானது.
இந்த நிலையில் பாகிஸ்தான் வீரர் ஷாகிப்சாதா ஃபர்ஹான் மற்றும் ஹாரிஸ் ராஃப் ஆகியோருக்கு எதிராக ஐசிசியிடம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் புகார் அளித்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான சூப்பர் 4 போட்டியின்போது இந்திய வீரர்களுக்குக் கோபம் ஏற்படும் வகையில் சைகைகளைச் செய்ததாக பாகிஸ்தான் வீரர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.