வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரியும் நிதிக்குழுத் தலைவருமான நஸ்முல் இஸ்லாம், அவ்வணியின் முன்னாள் கேப்டன் தமீம் இக்பாலை ’இந்திய முகவர்’ என்று கூறியதை அடுத்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஐபிஎல் தொடரின் கே.கே.ஆர். அணியிலிருந்து வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான் நீக்கப்பட்டதற்கு அந்நாட்டில் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்தவுள்ள டி20 உலகக் கோப்பைக்காக இந்தியாவுக்கு பயணம் செய்வதில்லை என்ற முடிவில் வங்கதேசம் உறுதியாக உள்ளது. ஆனால், ஐசிஐ இதில் மாற்றம் செய்ய முடியாது என்று தெரிவித்த நிலையில், வங்கதேசம் மீண்டும் ஐசிசிக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த நிலையில், அடுத்த சர்ச்சை வெடித்துள்ளது. வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரியும் நிதிக்குழுத் தலைவருமான நஸ்முல் இஸ்லாம், அவ்வணியின் முன்னாள் கேப்டன் தமீம் இக்பாலை ’இந்திய முகவர்’ என்று கூறியதை அடுத்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. மிர்பூரில் உள்ள சிட்டி கிளப் மைதானத்தில் ஜியா பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியின் கோப்பை மற்றும் ஜெர்சி வெளியீட்டு விழாவில் பங்கேற்ற தமீம் இக்பாலிடம், முஸ்தாபிசுரின் ஐபிஎல் நீக்கம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், “முஸ்தாபிசுர் ஐபிஎல்லில் இருந்து நீக்கப்பட்டது நிச்சயமாக துரதிர்ஷ்டவசமானது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. நான் வாரியத்தில் இருதிருந்தால், நாட்டின் எதிர்காலத்தையும் மற்ற அனைத்தையும் மனதில் கொண்டு செயல்பட்டிருப்பேன்" என்றார்.
மேலும் அவர், “திடீரென்று ஒரு கருத்தை வெளியிடுவது சிக்கலானது. பல பிரச்னைகளை பெரும்பாலும் விவாதத்தின் மூலமே தீர்க்க முடியும். உலக கிரிக்கெட்டில் பங்களாதேஷின் நிலை மற்றும் நாட்டின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்ட பிறகு நான் எனது முடிவை எடுப்பேன். இன்றைய முடிவு 10 ஆண்டுகளுக்குப் பிறகு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் கருத்தில் கொண்டு, நாட்டின் கிரிக்கெட் வீரர்களுக்கு எது சிறந்தது என்பதைத் தேர்ந்தெடுத்த பிறகு முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். மற்ற அனைவரையும் போலவே, எனக்கும் வங்கதேச கிரிக்கெட்டின் நலன்கள் முதலில் வருகின்றன.
ஆனால் எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் சிந்திக்கும்போது, மற்ற அனைத்தையும் பார்த்தால், நம்முடைய வருவாயில் 90–95 சதவீதம் ஐசிசியிடமிருந்து வருகிறது. எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு, பங்களாதேஷ் கிரிக்கெட்டை சிறப்பாக ஆதரிக்கும் முடிவை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். தமீம் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்த பிறகு, நஸ்முல் அவரை ’இந்திய முகவர்’ என்று முத்திரை குத்தினார். இந்த விவகாரம், வங்கதேச அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. பலரும் தமீம் இக்பாலுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.