ஆஸ்திரேலியாவில் டர்வினில் நடைபெறும் முதல் டெஸ்டில் வங்கதேசம் வரலாறு படைக்க நெருங்கியுள்ளது. ஆஸி அணி முதல் இன்னிங்ஸில் 198 ரன்களுக்கு சுருண்டது; ஹசன் மஹ்மூத் 6 விக்கெட்டுகள் எடுத்து ஆட்டத்தை புரட்டினார். பதிலுக்கு வங்கதேசம் 426 ரன்கள் குவித்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தங்களின் உயர்ந்த ஸ்கோரை பதிவு செய்தது. 228 ரன்கள் லீடுடன், ஆஸி 161/4 என இன்னும் பின்தங்கியுள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, ஆஸ்திரேலியாவில் உள்ள டர்வின் மைதானத்தில் நடந்துவருகிறது.
கடந்த 13ஆம் தேதி தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி, வங்கதேச பவுலர்களின் அட்டாக்கை தாக்குப்பிடிக்க முடியாமல் முதல் இன்னிங்ஸில் 198 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ஸ்டீவன் ஸ்மித் 71 ரன்களை அடித்தார். அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய வங்கதேச வேகப்பந்துவீச்சாளர் ஹசன் மஹ்மூத் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி மிரட்டினார். இதுவரை 3 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கும் ஹசன் மஹ்மூத் 3 முறையும் வெளிநாட்டு மண்ணிலேயே செய்துள்ளார்.
அதற்குபிறகு முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 426 ரன்கள் குவித்து மிரட்டியது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக வங்கதேச அணியின் அதிகபட்ச ஸ்கோராக பதிவானது. அதிகபட்சமாக தன்சித் ஹாசன் 101 ரன்கள் அடித்து மிரட்டினார். நஜ்முல் ஹொசைன் சாண்டோ 84 ரன்கள் மற்றும் மெஹிதி ஹாசன் 65 ரன்கள் அடித்து அணியை வலுவான லீடுக்கு எடுத்துச்சென்றனர்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக முதல்முறையாக 228 ரன்கள் லீட் எடுத்த வங்கதேசம், இரண்டாவது இன்னிங்ஸிலும் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறது. 3வது நாள் முடிவின் படி 161 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது ஆஸ்திரேலியா. இன்னும் 67 ரன்கள் பின்னிலையில் உள்ளது ஆஸ்திரேலியா, மீதம் 2 நாட்கள் இருக்கும்சூழலில் முதல்முறையாக ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் வெற்றி என மகத்தான சாதனையை படைக்கவிருக்கிறது வங்கதேசம்.