வங்கதேசத்தில் இந்துக்கள் கொல்லப்பட்டதை அடுத்து, இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளில் வங்கதேச வீரர்கள் விளையாடக் கூடாது என மதத் தலைவர்கள் மிரட்டியுள்ளனர். முஸ்தஃபிசூர் ரஹ்மானை கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
2026 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் கடந்த டிசம்பர் 16ஆம் தேதி நடைபெற்றது. இதில் அதிகபட்ச ஏலமாக கேமரூன் க்ரீன் 25.20 கோடிக்கும், சிஎஸ்கே அணி வெளியிட்ட மதீசா பதிரானா 18 கோடிக்கும் சென்றனர்.
இந்த ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வங்கதேச வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மானை சிஎஸ்கே உடன் போராடி 9.20 கோடிக்கு விலைக்கு வாங்கியது. ஆனால் தற்போது அந்த வீரரை ஏன் ஏலத்தில் எடுத்தோம் என வருத்தப்படும் அளவிற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
வங்கதேசத்தில் நடந்துவரும் வன்முறை கலவரத்தில் தீபு சந்திர தாஸ், அம்ரித் மண்டல் என்ற இரண்டு இந்து மதத்தை சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டத்தை அடுத்து, இந்தியாவில் கடும் எதிர்ப்பலைகள் எழுந்துள்ளன. இந்த எதிர்ப்பு தற்போது விளையாட்டிலும் எதிரொலித்துள்ளது.
2026 ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்ட ஒரே வங்கதேச வீரராக முஸ்தஃபிசூர் ரஹ்மான் இருக்கும் நிலையில், தற்போது அவரும் ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. வங்கதேசத்தில் இந்துக்கள் கொல்லப்பட்டதை அடுத்து, இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் வங்கதேசத்தை சேர்ந்த வீரர்கள் விளையாட கூடாது என உஜ்ஜைனியைச் சேர்ந்த மதத் தலைவர்கள் மிரட்டியுள்ளனர்.
வெளியாகியிருக்கும் தகவலின் படி, வங்கதேசத்தில் இந்துக்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி கொல்லப்பட்டுவரும்போது, இங்கே வங்கதேசத்தை சேர்ந்த வீரர்களை விளையாட அனுமதிப்பதை ஏற்க முடியாது. வங்கதேச கிரிக்கெட் வீரரை இங்கே விளையாட அனுமதித்தால், போட்டி நடைபெறும் மைதானத்தின் ஆடுகளத்தை பெயர்த்தெடுப்போம் என உஜ்ஜைனியை சேர்ந்த சாமியார் ஒருவர் மிரட்டல் விடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
கொல்கத்தா அணி வங்கதேச வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மானை ஏலத்தில் எடுத்ததற்கு தொடர்ந்து சமூகவலைதளத்தில் எதிர்ப்பு எழுந்துவருகிறது.