15 ஆண்டுகள்.. 5468 நாட்களுக்கு பின் வென்ற இங்கிலாந்து! ஆஸ்திரேலியா மண்ணில் சாதனை!
ஆஸ்திரேலியாவில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, இங்கிலாந்து அணி மெல்போர்னில் நடந்த 4வது டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜோஷ் டங் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகனாக தேர்வானார். இங்கிலாந்து அணி 5468 நாட்களுக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் வெற்றியை பதிவு செய்தது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் முதல் 3 போட்டியில் தோற்று தொடரை இழந்தது இங்கிலாந்து அணி. தொடரை இழந்தாலும், கடந்த 15 ஆண்டுகளாக ஆஸ்திரேலியா மண்ணில் ஒரு போட்டியில் கூட வென்றதில்லை என்ற கரையையாவது இங்கிலாந்து நீக்குமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது.
இந்தசூழலில் தான் மெல்போர்னில் நடந்த 4வது டெஸ்ட் போட்டியில் வென்று வரலாற்று வெற்றியை பதிவுசெய்துள்ளது இங்கிலாந்து அணி.
15ஆண்டுக்கு பின் வெற்றி..
பரபரப்பாக தொடங்கிய பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் முதலல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 152 ரன்களும், இங்கிலாந்து அணி 110 ரன்களும் அடித்தன.
முதல் இன்னிங்ஸில் 42 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா அணி, இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 132 ரன்களுக்கு சுருண்டது.
இந்தசூழலில் 175 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இதன்மூலம் 15 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்ட் போட்டியை கூட வென்றதில்லை என்ற மோசமான சாதனையை முடிவுக்கு கொண்டுவந்தது இங்கிலாந்து.
கிட்டத்தட்ட 5468 நாட்களுக்கு பிறகு ஆஸ்திரேலியா மண்ணில் வெற்றியை பதிவுசெய்தது இங்கிலாந்து அணி. 7 விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றிக்கு வித்திட்ட வேகப்பந்துவீச்சாளர் ஜோஷ் டங் ஆட்டநாயகனாக தேர்வுசெய்யப்பட்டார்.

