ர்களுக்குவங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜஹானாரா ஆலம், முன்னாள் தேர்வாளர் மஞ்சுருல் இஸ்லாம் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். அவர் தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றதாக கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் வங்கதேச கிரிக்கெட் அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜஹானாரா ஆலம், அவ்வணியின் முன்னாள் தேர்வாளர் மஞ்சுருல் இஸ்லாம் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ”முன்னாள் தேர்வாளர் மஞ்சுருல் இஸ்லாம் தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றார். ஒருமுறை அவர் என் அருகில் வந்து, என் கையைப் பிடித்து, என் தோளில் கையை வைத்து, மாதவிடாய் தொடர்பாக கேள்வி கேட்டார். ஐசிசி வழிகாட்டுதல்களின்படி பிசியோக்கள் உடல்நலக் காரணங்களுக்காக வீரர்களின் சுழற்சிகளைக் கண்காணிப்பதால், அவர்களுக்கு ஏற்கனவே தெரியும். ஒரு மேலாளருக்கோ அல்லது தேர்வாளருக்கோ அந்தத் தகவல் ஏன் தேவைப்பட்டது என்று எனக்குத் தெரியவில்லை.
நான், பதில் என்று சொன்னபோது, அவர், அதைக் குறிப்பிட்டு சில வார்த்தைகளைக் கூறினார். நான் அவரைப் பார்த்து, 'மன்னிக்கவும், பையா, எனக்குப் புரியவில்லை' என்றேன். தொடர்ந்து, நான் அமைதியாக இருந்து கிரிக்கெட்டில் கவனம் செலுத்த கடுமையாக முயற்சித்தேன். ஆனால் நான் சாதுர்யமாக அந்த முன்மொழிவைத் தவிர்த்ததால், அடுத்த நாளிலிருந்தே மஞ்சு பாய் என்னை அவமானப்படுத்தத் தொடங்கினார்" என ஜஹானாரா அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
இதுகுறித்து, வங்கதேச வாரிய பல மூத்த அதிகாரிகளிடம் தெரிவித்ததாகவும், குறிப்பாக மகளிர் குழுத் தலைவர் நடேல் சவுத்ரிகூட தனது புகாரைக் கேட்கத் தவறிவிட்டதாகவும், பிசிபி தலைமை நிர்வாகி நிஜாமுதீன் சவுத்ரி பல சந்தர்ப்பங்களில் தனது புகார்களைப் புறக்கணித்ததாகவும் தெரிவித்துள்ளார். வங்கதேச கிரிக்கெட் அரசியலில் புயலைக் கிளப்பியுள்ள இந்தச் சம்பவத்தை, மஞ்சுருல் இஸ்லாம் மறுத்துள்ளார். "அவை, ஆதாரமற்றது என்று சொல்வதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும். நான் நல்லவனா, கெட்டவனா என்று மற்ற கிரிக்கெட் வீராங்கனைகளிடம் நீங்கள் கேட்கலாம்" என மஞ்சுருல் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, வங்கதேச வாரியம் ஜஹானாராவின் குற்றச்சாட்டுகளை கவனத்தில் கொண்டுள்ளது. "குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை, எனவே எங்கள் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்க வேண்டும் என்பதை நாங்கள் கூடி முடிவு செய்வோம். தேவைப்பட்டால், நிச்சயமாக விசாரணை நடத்துவோம்" என்று BCB துணைத் தலைவர் ஷகாவத் ஹொசைன் கூறினார்.
சமீபத்தில், கேப்டன் நிகர் சுல்தானா ஜோதிக்கு ஜூனியர்களை உடல்ரீதியாக தாக்கும் பழக்கம் இருப்பதாகவும், சமீபத்தில் முடிவடைந்த 2025 மகளிர் உலகக்கோப்பையின் போதும் அவர் இதைச் செய்ததாகவும் ஜஹானாரா ஆலம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.