ஆசிய கோப்பை | இந்தியா Vs வங்கதேசம் சூப்பர் 4 சுற்று... இறுதிப் போட்டிக்கு முன்னேறப்போவது யார்?
ஆசியகோப்பை கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வேட்கையுடன் பங்களாதேஷ் அணியை சூப்பர் 4 சுற்றில் இன்று எதிர்கொள்கிறது இந்திய அணி...
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 17-வது ஆசிய கோப்பை போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் போன்ற அணிகள் சூப்பர் 4 சுற்றை எட்டியுள்ளன. இந்த சூப்பர் 4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். அதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
ஏற்கனவே நடந்த சூப்பர் 4 சுற்று போட்டிகளில் பாகிஸ்தானை இந்திய அணியும், இலங்கையை வங்கதேச அணியும் தோற்கடித்துள்ளது. தொடர்ந்து, இன்று நடைபெறும் சூப்பர் 4 சுற்றுப் போட்டியில் ஏற்கனவே வெற்றி பெற்றுள்ள இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதவிருக்கின்றன. தொடர்ந்து, இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிடும்.
இதுவரை, இருபது ஓவர் போட்டிகளில் இந்தியாவும், பங்களாதேஷ்-ம் 17 முறை மோதியுள்ளன. இதில், வங்கதேசம் ஒரேயொரு முறை மட்டுமே வெற்றி கண்டிருக்கிறது. ஆயினும், 2015- ம் ஆண்டுக்குப் பிறகு இரு அணிகளுக்கும் இடையிலான போட்டிகள் விறுவிறுப்பாகி வருகின்றன. இந்திய அணியில் அபிஷேக் சர்மா, சுப்மன் கில் ஆகியோரின் தொடக்க அதிரடி எதிரணியை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. சஞ்சு சாம்சன், திலக் வர்மா ஆகியோர் திறமைக்கேற்ற ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.
வங்கதேச அணியை பொறுத்த வரை கேப்டன் லிட்டன் தாஸ் மற்றும் தௌஹித் ஹ்ரிதோய், சைப் ஹசன் ஆகியோரின் ஆட்டத்தை பங்களாதேஷ் அணி அதிகம் நம்பியுள்ளது. வங்கதேச அணியின் வெற்றிக்கு, சுழற்பந்து வீச்சாளர்களான ரிஷாத் ஹொசைன், மெஹிதி ஹசன் ஆகியோர் இந்தியாவின் ரன் ஓட்டத்தைக் கட்டுப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முஸ்தாஃபிசூர், தஸ்கின் அகமது, டன்சிம் ஹசன் சாகிப் ஆகியோரை கொண்டுள்ள பங்களாததேஷ் அணி வேகப்பந்துவீச்சில் ஓரளவு வலுவாகவே உள்ளது. ஆனால், யானை பலத்துடன் ஆசியக்கோப்பையில் வலம் வரும் இந்திய அணிக்கு பங்களதேஷ் அணி எந்தளவுக்கு சவால் கொடுக்கும் என்பதை இன்று இரவு வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இன்றைய போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.