ஜூனியர்களை வங்கதேச கேப்டன் அடித்ததாக முன்னாள் வீராங்கனை குற்றஞ்சாட்டியுள்ளார்.
8 அணிகள் பங்கேற்ற 2025 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டன் வென்றது. இதையடுத்து, இந்திய அணிக்கு உலகம் முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இத்தொடரில் கலந்துகொண்ட வங்கதேசம் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது. இதற்கிடையே, அவ்வணியின் கேப்டன் நிகர் சுல்தானா ஜோதி ஜூனியர்களை அடித்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. வங்கதேசத்தை தளமாகக் கொண்ட ’காலர் காந்தோ’ செய்தித்தாளுக்கு முன்னாள் சக வீராங்கனை ஜஹனாரா ஆலம் அளித்துள்ள பேட்டியில்தான் இந்த விவகாரம் தெரிய வந்துள்ளது.
’கேப்டன் நிகர் சுல்தானா ஜோதிக்கு ஜூனியர்களை உடல்ரீதியாக தாக்கும் பழக்கம் இருப்பதாகவும், சமீபத்தில் முடிவடைந்த 2025 மகளிர் உலகக்கோப்பையின் போதும் அவர் இதைச் செய்த’தாகவும் ஆலம் தெரிவித்துள்ளார். வீராங்கனைகளில் சிலர், தாக்கப்பட்டதாக தன்னிடம் கூறியதாகவும், துபாய் சுற்றுப்பயணத்தின்போதும், ஜோதி ஒரு ஜூனியரை அறைக்குள் அழைத்து அவரை அறைந்ததாகவும், வங்கதேச கிரிக்கெட் வட்டாரங்களுக்குள் கடுமையான அரசியல் நிலவுவதாகவும், ஒரு சிலருக்கு மட்டுமே, சில சமயங்களில் மேம்பட்ட வசதிகள் கிடைப்பதாகவும், மற்றவர்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை வங்கதேச கிரிக்கெட் வாரியம் கடுமையாக மறுத்துள்ளது. இவை 'ஆதாரமற்றவை, ஜோடிக்கப்பட்டவை மற்றும் எந்த உண்மையும் இல்லாதவை' என்று கூறியுள்ளது. ’வங்கதேச மகளிர் அணி சர்வதேச அரங்கில் பாராட்டத்தக்க முன்னேற்றத்தையும் ஒற்றுமையையும் காட்டி வரும் நேரத்தில், இதுபோன்ற இழிவான மற்றும் அவதூறான கூற்றுகள் கூறப்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது என்று வாரியம் கருதுகிறது’வங்கதேச கிரிக்கெட் வாரிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.