2026 டி20 உலகக்கோப்பைக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாபர் அசாம் அணியில் இடம்பிடித்துள்ள நிலையில், ஹாரிஸ் ராஃப் காயம் காரணமாக விலக்கப்பட்டுள்ளார். சல்மான் ஆகா தலைமையில் பல திறமையான வீரர்கள் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் அணி சிறந்த கலவையாக அமைந்துள்ளது.
2026 டி20 உலகக்கோப்பை தொடரானது வரும் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் தொடங்கி மார்ச் 8ஆம் தேதிவரை நடைபெறவிருக்கிறது. 20 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 5 அணிகள் அதில் இடம்பெற்றுள்ளன.
நடப்பு சாம்பியனாக களமிறங்கவிருக்கும் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.
உலகக்கோப்பை தொடங்க இன்னும் இரண்டு வாரங்களே உள்ள சூழலில், ஒவ்வொரு அணிகளும் 15 பேர்கள் கொண்ட ஸ்குவாடை உறுதிசெய்துவருகின்றன. அந்த வகையில் பாகிஸ்தான் அணி தங்களுடைய உலகக்கோப்பை அணியை அறிவித்துள்ளது.
2026 டி20 உலகக்கோப்பைக்காக அறிவிக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தான் அணியில், மூத்தவீரர் பாபர் அசாம் இடம்பிடித்துள்ளார். முக்கிய பவுலரான ஹாரிஸ் ராஃப் காயம் காரணமாக இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சல்மான் ஆகா தலைமையிலான அணியில் பாபர் அசாம், ஃபகர் ஜமான், காவாஜா நஃபே என மூன்று முழுமையான பேட்ஸ்மேன்களும், கேப்டன் உட்பட சைம் ஆயுப், ஃபஹீம் அஷ்ரஃப், ஷதாப் கான், முகமது நவாஸ் முதலிய 5 ஆல்ரவுண்டர்களும், உஸ்மான் கான், சாஹிப்சதா ஃபர்ஹான் என இரண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களும், நசீம் ஷா, ஷாஹீன் அஃப்ரிடி, அப்ரார் அஹமது, சல்மான் மிர்சா, உஸ்மான் தரிக் முதலிய 5 பவுலர்களும் இடம்பிடித்துள்ளனர். பாகிஸ்தான் அணி சிறந்த கலவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பை அணி:
சல்மான் அலி ஆகா (கேப்டன்), அப்ரார் அகமது, பாபர் அசாம், ஃபஹீம் அஷ்ரஃப், ஃபகார் ஜமான், கவாஜா முகமது நஃபே (WK), முகமது நவாஸ், முகமது சல்மான் மிர்சா, நசீம் ஷா, சாஹிப்சாதா ஃபர்ஹான் (wk), சைம் ஆயுப், ஷஹீன் ஷா அப்ரிடி, ஷதாப் கான், உஸ்மான் கான், உஸ்மான் தாரிக்.