சேப்பாக்கில் நடந்த ஐபிஎல் லீக் போட்டியில், முதல் ஆட்ட தோல்விக்குப் பிறகு பஞ்சாப் கிங்ஸை எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ், இளம் வீரர் ஆயுஷ் மாத்ரேவின் வெடிகுண்டு பேட்டிங்கால் 209 ரன்கள் குவித்தது. 18 வயது 261 நாட்களில் அரைசதம் அடித்து சேப்பாக்கில் குறைந்த வயதில் சாதனை படைத்த மாத்ரே, 6 பவுண்டரி, 5 சிக்சர் அடித்து 73 ரன்கள் குவித்தார். ஷிவம் துபே 40 ரன்கள் சேர்த்தார்.
2026 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக படுதோல்வியை சந்தித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. டெவால்ட் பிரேவிஸ், தோனி போன்ற வீரர்கள் இல்லாதது சிஎஸ்கேவின் பேட்டிங்கிலும் எதிரொலித்த நிலையில், அவர்களால் வெறும் 127 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. பந்துவீச்சிலும் சூர்யவன்ஷியை சமாளிக்க முடியாத நிலையே இருந்தது.
இந்தசூழலில் முதல் போட்டியில் ஏற்பட்ட மிகப்பெரிய தோல்விக்கு பின், இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸை சொந்த மண்ணில் எதிர்கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
பரபரப்பாக தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வுசெய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், தொடக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 7 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். ஆனால் அடுத்து களமிறங்கிய ஆயுஷ் மாத்ரே நாலாபுறமும் சிக்சர் பவுண்டரிகளாக பறக்கவிட்டு மிரட்டினார்.
யான்சன், பார்ட்லெட், வைசாக் என யாரையும் விட்டுவைக்காத மாத்ரே 6 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் என அடித்து 73 ரன்களில் வெளியேறினார். சேப்பாக்கத்தில் (18 வயது 261 நாட்கள்) குறைந்த வயதில் அரைசதமடித்த இளம் வீரராக சாதனை படைத்தார்.
தொடர்ந்து ருதுராஜ், கார்த்திக் சர்மா அடுத்தடுத்து வெளியேற, 6வது வீரராக களமிறங்கிய சர்பராஸ் கான் 12 பந்தில் 6 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 32 ரன்கள் அடித்து அசத்தினார். இறுதிவரை களத்தில் நின்ற ஷிவம் துபே 45 ரன்கள் அடிக்க 20 ஓவரில் 209 ரன்களை அடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
சேப்பாக்கத்தில் கடைசி 3 முறை நடந்த மோதலில் சென்னையை பஞ்சாப் அணி வீழ்த்தியிருக்கும் நிலையில், இப்போட்டியில் சிஎஸ்கே வெற்றிபெறுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.