rohit sharma drop catch x
கிரிக்கெட்

’இப்படி பண்ணிட்டீங்களே..’ பறிபோன வரலாற்று சாதனை.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட கேப்டன் ரோகித்!

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.

Rishan Vengai

ஐசிசி தொடர், அதில் வங்கதேசத்தை இந்தியா எதிர்கொள்கிறது என்றாலே, அந்த போட்டியில் இந்தியா வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற வெறித்தனமான உணர்வானது ஒவ்வொரு இந்திய ரசிகர்களுக்கும் ஒருமித்த எண்ணமாகவே இருக்கும்.

2007 உலகக்கோப்பையில் ஏற்பட்ட காயத்தின் வலி, ஒவ்வொரு இந்திய ரசிகனின் நெஞ்சிலும் இன்னும் ஆறாமல் தான் இருந்துவருகிறது.

எப்போது வங்கதேசம் இந்தியாவை எதிர்கொண்டாலும், அவர்களும் முழுத் திறனை வெளிக்காட்டவே முயல்வார்கள் என்பதால், ஆட்டம் எப்போதுமே அனல்பறக்கும் போட்டியாகவே கவனம் ஈர்க்கும்.

ind vs ban

2007 உலகக்கோப்பையில் இந்தியாவை வீழ்த்தி வங்கதேசம் வெற்றிபெற்றது, டி20 உலகக்கோப்பையில் 1 ரன்னில் வெற்றிபெற்று இந்தியா பதிலடி கொடுத்தது என இவ்விரு அணிகளின் மோதல் என்பது, சுவாரசியம் மிகுந்ததாகவே ஐசிசி தொடர்களில் இருந்துள்ளது.

ind vs ban

அந்தவகையில் 2025 சாம்பியன்ஸ் டிராபியில் முதல் போட்டியிலேயே இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதிவருகின்றன.

ரசிகர்கள் இதயம் உடைத்த ரோகித் சர்மா..

துபாயில் தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்துவரும் வங்கதேச அணி, 35 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்தப்போட்டியில் ஒன்பதாவது ஓவரை வீசிய இந்திய சுழற்பந்துவீச்சாளர் அக்சர் பட்டேல், ஓவரின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பந்துகளில் தான்சித் ஹசன் மற்றும் முஷ்பிகுர் ரஹீம் இருவரையும் அடுத்தடுத்து அவுட்டாக்கி வெளியேற்றினார். இதன்மூலம் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தும் வாய்ப்பு அக்சர் பட்டேலுக்கு உருவானது.

அடுத்த பந்தையும் சிறந்த பந்தாக அக்சர் பட்டேல் வீச, அதை எதிர்த்து விளையாடிய வங்கதேச வீரர் ஜேக்கர் அலி, பந்தை எட்ச் எடுத்து ஸ்லிப் திசையில் கேட்ச்சிற்கு கொடுத்தார். எளிதாக காற்றில் எகிறிவந்த பந்தை ஸ்லிப்பில் நின்ற கேப்டன் ரோகித் சர்மா ஈசியான கேட்ச்சை எடுக்காமல் கோட்டைவிட்டார்.

எல்லோரும் ஹாட்ரிக் விக்கெட் விழுந்துவிட்டதென கொண்டாட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பிக்க, அடுத்த நொடியே ஒவ்வொரு இந்திய ரசிகர்களின் மனதையும் நொறுக்கிவிட்டார் ரோகித் சர்மா. கேட்ச்சை விட்ட விரக்தியில் கேப்டன் ரோகித் சர்மா தன் கைகளை மூன்று அல்லது நான்குமுறை புல்தரையில் அடித்துக்கொண்டார். அக்சர் பட்டேலிடம் உடனடியாக மன்னிப்புக்கோரினார்.

பறிபோன வரலாற்று சாதனை..

ரோகித் கேட்சை விட்டதால் சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் ஒரே ஓவரில் ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்திய முதல் பவுலராக அக்சர் பட்டேல் வரலாற்று சாதனையை படைத்திருப்பார்.

இதற்குமுன்னர் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த ஒரே பவுலராக வெஸ்ட் இண்டீஸின் ஜெரோம் டெய்லர் நீடிக்கிறார். ஆனால் அவர் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்த 2 ஓவர்களை எடுத்துக்கொண்டார். 2006 சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் 47.5, 47.6 மற்றும் 49.1 ஓவரில் மைக்கேல் ஹஸ்ஸி, பிரெட் லீ, பிராட் ஹாக் மூவரையும் வெளியேற்றி ஹாட்ரிக் சாதனையை படைத்திருந்தார்.

Brad Hogg is bowled by Jerome Taylor

ரோகித் சர்மா கேட்ச்சை தவறவிட்டதால் ஒரு மகத்தான சாதனையை அக்சர் பட்டேல் தவறவிட்டுள்ளார்.