ஆஸ்திரேலிய வீராங்கனை அன்னாபெல் சதர்லேண்ட், இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ்க்கு 'நீ தகுதியானவள்' என வாழ்த்தியதன் மூலம், தோல்வியின் வேதனையிலும் மனிதநேயத்தை வெளிப்படுத்தினார். இந்த நெகிழ்ச்சியான தருணம் ஜெமிமாவை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது, மேலும் சதர்லேண்டின் மனிதநேயத்தை வெளிப்படுத்தியது.
ஒரு நாணயத்திற்கு இருபக்கம் இருப்பதுபோல, ஒரு உலகக்கோப்பை வெற்றிக்கு பின்னால் எப்படி ஒரு அணி கொண்டாட்டத்தின் உச்சத்தில் இருக்கிறதோ, அதேபோல மற்றொரு அணி தோல்வியின் காயத்தில் உழன்று கொண்டிருக்கும்..
அந்தவகையில் இந்தியாவிற்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் 338 ரன்கள் குவித்தபிறகும் அடைந்த தோல்வி ’இன்னும் என்னை வேட்டையாடுகிறது’ என்று வேதனையுடன் பகிர்ந்துள்ளார் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் அலிசா ஹீலி..
இப்படி தொடர்முழுவதும் தோற்கடிக்க முடியாத ஒரு அணியாக வலம்வந்த ஆஸ்திரேலியா மகளிர் அணியின் வீரர்கள், இந்தியாவிற்கு எதிராக கண்ட தோல்விக்கு பிறகு அதிக வேதனையில் உழன்றுகொண்டிருக்கின்றனர்..
ஆனால் அப்படியான நேரத்திலும் ’நீ போ இது உனக்கான நேரம், இந்த வெற்றிக்கு நீ தகுதியானவள்’ என ஆஸ்திரேலியா வீராங்கனை அன்னாபெல் சதர்லேண்ட் வாழ்த்தியது ஜெமிமா ரோட்ரிக்ஸை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது..
இந்தியாவிற்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் 338 ரன்களை குவித்து ’எங்களை வீழ்த்தவே முடியாது’ என்ற சிம்மாசனத்தில் அமர்ந்தது ஆஸ்திரேலியா மகளிர் அணி.. ஆனால் ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றிலும் நாக்அவுட் போட்டியில் சேஸ்செய்யப்படாத ஒரு இலக்கை, எட்டிப்பிடித்து வரலாறு படைத்தது இந்திய மகளிர் அணி. இறுதிவரை ஆட்டமிழக்காமல் 127* ரன்கள் குவித்து மிரட்டிய ஜெமிமா ரோட்ரிக்ஸ், 7 முறை உலகசாம்பியனான ஆஸ்திரேலியா அணிக்கு ஒரு உறக்கமில்லா இரவை பரிசளித்தார்..
இந்தசூழலில் ஒரு இதயம் உடைக்கும் தோல்வியின் போதும் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர ஆல்ரவுண்டர் அன்னாபெல் சதர்லேண்ட், ஜெமிமா ரோட்ரிக்ஸ்க்கு சொன்ன நெகிழ்ச்சியான வாழ்த்து ஜெமிமாவை ஆச்சரியப்படுத்தியுள்ளது..
இதுகுறித்து சமீபத்தில் பகிர்ந்திருக்கும் ஜெமிமா, “சதர்லேண்ட் ஒரு சூப்பர்ஸ்டார் வீராங்கனை, நான் அவரை உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்கள் 3 பேரில் ஒருவராக மதிப்பிடுவேன். சமகாலத்தில் அவர்தான் நம்பர் 1 ஆல்ரவுண்டர் என்று கூறுவேன். என்னிடம் அந்தவார்த்தைகளை கூறவேண்டிய அவசியம் கூட அவருக்கு இல்லை, நான் இதை இங்கே பதிவுசெய்ய விரும்புகிறேன்..
அரையிறுதியில் தோற்றதற்கு பிறகு அவருக்கு அது ஒரு ஹார்ட்பிரேக்கிங் தருணமாக இருந்திருக்கும். அவர் எந்தளவு கிரிக்கெட்டை நேசிக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அப்படியான நேரத்திலும் ’இந்த தொடர் முழுவதும் நீ சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாய், இந்த இரவு அந்த வெற்றித் தருணத்தை உனதாக்கிக்கொள்ள நீ தகுதியானவள்’ என்று பாராட்டி எனக்கு மெசேஜ் செய்தார்..
அந்த மெசேஜை பார்த்தபோது ‘என்ன மாதிரியான மனிதர் இவர், ஒரு இதயம் உடைந்த தருணத்திலும் கூட சகவீராங்கனையின் வெற்றியை பாராட்டி ஊக்கமளிக்கிறார். நான் அவருக்கு எதிராளியாக இருந்தபோதும், என்னை வாழ்த்தி எனக்காக அவர் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார்.. அந்த தருணத்தில் அவர்மீது தனி மரியாதையே வந்துவிட்டது” என்று நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.