மைக்கேல் கிளார்க் எக்ஸ், இன்ஸ்டா
கிரிக்கெட்

மூக்கில் உருவான தோல் புற்றுநோய்.. ஆஸி. முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் உருக்கம்!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்கின் மூக்கில் இருந்து தோல் புற்றுநோய் அகற்றப்பட்டுள்ளது.

Prakash J

ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தனது மூக்கில் தோல் புற்றுநோய் அகற்றப்பட்டதைப் பகிர்ந்து, ஆஸ்திரேலியாவில் தோல் புற்றுநோய் உண்மையானது என்பதை நினைவூட்டுகிறார். அவர் தனது அனுபவத்தை பகிர்ந்து, சரும பரிசோதனையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். குணப்படுத்துவதைவிட தடுப்பது சிறந்தது என அவர் கூறுகிறார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்களில் ஒருவர், மைக்கேல் கிளார்க். அந்த அணிக்கு, உலகக்கோப்பை வென்று கொடுத்த கேப்டனாகவும் அவர் அறியப்படுகிறார். இந்த நிலையில், தன் மூக்கில் இருந்து தோல் புற்றுநோய் அகற்றப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டிருப்பதுடன் அது தொடர்பான மருத்துவச் செய்தி ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், “குறிப்பாக ஆஸ்திரேலியாவில், தோல் புற்றுநோய் உண்மையானது. இன்று என் மூக்கில் ஓர் அறுவைசிகிச்சை நடைபெற்றது. எனவே உங்கள் சருமத்தை பரிசோதித்துக் கொள்ள இதன்மூலம் நான் நினைவூட்டுகிறேன். குணப்படுத்துவதைவிட தடுப்பது சிறந்ததாகும். ஆனால் என் விஷயத்தில், வழக்கமான பரிசோதனைகள் மற்றும் ஆரம்பகால கண்டறிதல் முக்கியமாக இருந்தது” எனப் பதிவிட்டுள்ளார்.

கிளார்க் இந்த அறுவைசிகிச்சைக்கு உட்படுத்தப்படுவது இது முதல் முறை அல்ல. 2006ஆம் ஆண்டில், அவர் ஆஸ்திரேலியாவில் அறிமுகமான இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு,அவருக்கு முதன்முதலில் இந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் பல ஆண்டுகளாக அவரின் பல புற்றுநோய்கள் அகற்றப்பட்டுள்ளன. எனினும், தொடர்ச்சியான உடல்நலப் பின்னடைவுகள் இருந்தபோதிலும், ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் கிளார்க்கின் வளர்ச்சி மகத்தானது.

கிரிக்கெட்டில் சாதித்த மைக்கேல் கிளார்க்

2004 முதல் 2015 வரை ஆஸ்திரேலியாவுக்காக 115 டெஸ்ட், 245 ஒருநாள் மற்றும் 34 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில், டெஸ்ட் போட்டிகளில் 8,643 ரன்களையும், ஒருநாள் போட்டிகளில் 7,981 ரன்களையும் எடுத்துள்ளார். அதேநேரத்தில் அனைத்து வடிவங்களிலும் 94 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். கேப்டனாக, கிளார்க் 74 டெஸ்ட் மற்றும் 139 ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவை வழிநடத்தியுள்ளார். அவரது மிகப்பெரிய வெற்றிகளில் 2013-14 டவுன் அண்டரில் 5-0 ஆஷஸ் தொடரும், சொந்த மண்ணில் 2015 உலகக் கோப்பையும் அடக்கம்.

மைக்கேல் கிளார்க்

ஆஸ்திரேலியாவில் தோல் புற்றுநோய்

தோல் புற்றுநோய் என்பது அசாதாரண தோல் செல்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியால் ஏற்படுகிறது. உலகிலேயே அதிக தோல் புற்றுநோய் விகிதங்களை ஆஸ்திரேலியா கொண்டிருக்கிறது. முதன்மையாக சூரியனில் இருந்து வரும் புற ஊதா (UV) கதிர்வீச்சு அல்லது தோல் பதனிடும் படுக்கைகள், பெரும்பாலும் வெள்ளை நிறமுள்ள மக்கள்தொகை ஆகியவையே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. 70 வயதிற்குள் மூன்று ஆஸ்திரேலியர்களில் குறைந்தது இரண்டு பேருக்கு ஏதேனும் ஒரு வகையான தோல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்படும் என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.