ind vs aus x page
கிரிக்கெட்

17 ஆண்டுகளுக்குப் பிறகு அடிலெய்டில் தோல்வியைத் தழுவிய இந்தியா.. தொடரைக் கைப்பற்றிய ஆஸி.!

இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வியைத் தழுவியதால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இழந்துள்ளது.

Prakash J

இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வியைத் தழுவியதால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இழந்துள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி முதற்கட்டமாக 3 ஒருநாள் போட்டிகள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதன்படி, கடந்த அக்டோபர் 19ஆம் தேதி பெர்த்தில் தொடங்கிய முதல் போட்டியில் இந்திய அணி கடுமையான தடுமாற்றத்தை எதிர்கொண்டது. இதன் காரணமாக ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதற்கிடையே, இரண்டாவது ஒருநாள் போட்டி அடிலெய்டில் இன்று நடைபெற்றது. இன்றைய போட்டியில் டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியை முதலில் பேட் செய்ய பணித்தது. அதன்படி, தொடக்க வீரர்களாக முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவும், இந்நாள் கேப்டன் சுப்மன் கில்லும் களமிறங்கினர். கடந்த போட்டியில் 8 ரன்களில் வெளியேறிய ரோகித், இந்தப் போட்டியில் பெரிய ஸ்கோரைத் தரவேண்டிய நெருக்கடிக்கு உள்ளானார். இதனால், அவர் பொறுப்புணர்ந்து ஆடினார். ஆனால், கேப்டன் கில் இந்த முறையும் ஏமாற்றினார். அவர் 9 ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ’ரன் மெஷின்’என அழைக்கப்படும் விராட் கோலியும் இந்த முறை ஏமாற்றினார். அவர், இன்றைய போட்டியிலும் டக் அவுட் முறையில் வீழ்ந்தார்.

ind

ஆனால், அதற்குப் பின்னர் ரோகித்துடன் கைகோர்த்த ஸ்ரேயாஸ் ஐயர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் தங்கள் பங்கிற்கு அரைசதம் அடித்த நிலையில் பிரிந்தது. ரோகித் 73 ரன்களிலும், ஸ்ரேயாஸ் 61 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆனால், இறுதிக்கட்டத்தில் அக்‌ஷர் படேலின் 44 ரன்களூம், ஹர்சித் ரானாவின் 24 ரன்களும் இந்திய அணிக்கு 264 ரன்களைத் தேடித் தந்தன. அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு இந்த ரன்களை எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஜம்பா 4 விக்கெட்களையும் பர்த்லெப்ட் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பின்னர், 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில், தொடக்க வீரர் கேப்டன் மைக்கேல் மார்ஷ் 11 ரன்களில் ஏமாற்றினாலும், டிராவிஸ் ஹெட் (28 ரன்கள்), மேத்யூ ஷார்ட் (74), ரென்சா (30) ஆகியோர் நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். அதை இறுகப் பிடித்துக் கொண்ட பின்னால் களமிறங்கிய வீரர்களும், அணியை எளிதாக வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இறுதியில் இடையிடையே விக்கெட்கள் விழுந்து அந்த அணி போராட்டத்தைச் சந்தித்தாலும், கானலி மற்றும் மைக்கேல் ஓவனின் (36 ரன்கள்) பேட்டிங்கால், 46.2 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

aus

இந்த வெற்றிமூலம் 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி அடிலெய்டு மைதானத்தில் தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2008-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா இந்த மைதானத்தில் தோற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கானலி 61 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில், அர்ஷ்தீப், ராணா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். இந்தப் போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து, இந்திய அணி தொடரை இழந்தது. இவ்விரு அணிகளுக்கான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி அக்டோபர் 25ஆம் தேதி சிட்னியில் நடைபெறுகிறது.