2 வருடங்களாக டாஸில் தோற்கும் இந்தியா.. மகளிர் அணிக்கும் அதே நிலைமை!
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி முதற்கட்டமாக 3 ஒருநாள் போட்டிகள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதன்படி, கடந்த அக்டோபர் 19ஆம் தேதி பெர்த்தில் தொடங்கிய முதல் போட்டியில் இந்திய அணி கடுமையான தடுமாற்றத்தை எதிர்கொண்டது. இதன் காரணமாக ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதற்கிடையே, இரண்டாவது ஒருநாள் போட்டி அடிலெய்டில் இன்று நடைபெற்றது. இதிலும் இந்திய அணி தோல்வி கண்டு தொடரை இழந்துள்ளது. அதேநேரத்தில், இந்தப் போட்டியில் டாஸை இழந்ததன்மூலம் இந்திய அணி கடைசியாக விளையாடிய 17 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஒருமுறைகூட டாஸ் ஜெயிக்கவில்லை.
கடைசியாக நடந்த 2023ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றிருந்தது. அப்போது, ரோஹித் சர்மா ஆரம்பித்து வைத்த இந்தப் பயணம் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் இன்றுவரை நீடிக்கிறது.
டாஸ், வெற்றியை உறுதி செய்யாது என்றபோதிலும், அவை விளையாடும் நிலைமைகளை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள அணியை அனுமதிக்கின்றன. இருப்பினும், டாஸ் ஜெயிப்பதில் 62.5 வெற்றி சதவீதத்தைக் கொண்டிருப்பதில் இந்தியா மகிழ்ச்சியடையும். டாஸை இழந்தபோதிலும் 16 ஒருநாள் போட்டிகளில் 10 போட்டிகளில் இந்திய அணி வென்றுள்ளது. ஆக, அணி அனைத்து வகையான சவால்களுக்கும் தயாராக உள்ளது என்பதை இது நிரூபிக்கிறது.
மற்றொரு புறம், இந்திய மகளிர் அணியும் டாஸ் ஜெயிப்பதில் தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியிலும் டாஸை இந்திய அணி தோற்றதன்மூலம் உலகக் கோப்பை தொடரில் 6 போட்டியிலும் டாஸை இழந்துள்ளது. ஆடவர் அணியைத் தொடர்ந்து இந்திய மகளிர் அணியும் தொடர்ச்சியாக 6 முறை டாஸை இழந்துள்ளது பேசும்பொருளாக மாறியுள்ளது.

