ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது.
பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நடப்பு WTC சாம்பியனான ஆஸ்திரேலியாவை 295 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி மீண்டும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. அதுமட்டுமின்றி 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை பெற்றது. இந்நிலையில் அடிலெய்டில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியைச் சந்தித்துள்ளது.
பரபரப்பாக தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி, மிட்செல் ஸ்டார்க்கின் 6 விக்கெட்டுகள் என்ற அபாரமான ஸ்பெல்லில் சிக்கி 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியாவை தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி டிராவிஸ் ஹெட்டின் அதிரடியான சதத்தால் 337 ரன்கள் சேர்த்தது.
பின், தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி மீண்டும் தடுமாற்றத்துடனே ஆட்டத்தைத் தொடங்கியது. ஜெய்ஸ்வால், ராகுல், கில், கோலி என அனைத்து பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களுக்கு வெளியேறினர். இறுதியில் சற்று நிலைத்து நின்று ஆடிய நிதிஷ் ரெட்டி மட்டும் 42 ரன்களை எடுத்து ஆறுதல் தந்தார். இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 175 ரன்களை சேர்த்து 18 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றது. சிறப்பாக பந்துவீசிய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் கம்மின்ஸ் 5 விக்கெட்களையும், போலந்த் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி 19 ரன்கள் எனும் எளிய இலக்குடன் ஆட்டத்தைத் தொடங்கி, 3.2 ஓவர்களில் வெற்றி பெற்றது. தொடரையும் 1-1 என்று சமன் செய்தது. ஆட்டநாயகனாக ட்ராவிஸ் ஹெட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய அணி 13 பகலிரவு டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடிய நிலையில் அதில் 12 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரே ஒரு போட்டியில் மட்டும் தோல்வி அடைந்துள்ளது.
போட்டி முடிந்த பின் பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, “நாங்கள் சரியாக விளையாடவில்லை. எங்களை விட ஆஸ்திரேலியா நன்றாக விளையாடியது. கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தத் தவறிவிட்டோம். நாங்கள் பெர்த் டெஸ்ட் போட்டியில் செயல்பட்டதுபோலே செயல்பட வேண்டும். ஆனால், ஒவ்வொரு டெஸ்ட் போட்டியும் தனித்தனி சவால்களைக் கொண்டது. அடுத்த டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.