Ind vs Aus
Ind vs Aus Twitter
கிரிக்கெட்

4 டாப் ஆர்டர் வீரர்கள் அரைசதம்! இந்தியாவிற்கு 353 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா!

Rishan Vengai

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடர் முடிந்ததும் 2 அணிகளும் உலகக்கோப்பை தொடரில் விளையாட உள்ளதால், இரண்டு சாம்பியன் அணிகளுக்கு இடையேயான மோதலானது ரசிகர்கள் இடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதலிரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை 2-0 என கைப்பற்றிய நிலையில், தங்களுடைய முதல் வெற்றியை பதிவுசெய்யும் எண்ணத்தில் மூன்றாவது போட்டியில் களமிறங்கியுள்ளது ஆஸ்திரேலியா.

இந்த போட்டியில் இந்திய அணியில் இஷான் கிஷானுக்கு ஓய்வளிக்கப்பட்டு, சூர்யகுமாருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் முதலிரண்டு போட்டிகளில் ஓய்விலிருந்த கேப்டன் ரோகித், விராட் கோலி, குல்தீப் யாதவ் முதலிய வீரர்கள் அணிக்குள் திரும்பியுள்ளனர்.

தொடர்ச்சியாக மூன்று அரைசதங்களை பதிவு செய்த டேவிட் வார்னர்!

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் இந்தியாவை பந்துவீசுமாறு அழைத்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் மிட்சல் மார்ஷ் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதலிரண்டு போட்டிகளில் அரைசதம் அடித்த டேவிட் வார்னர் இந்த போட்டியிலும் தொடர்ச்சியாக 3வது அரைசதத்தை பதிவு செய்து அசத்தினார்.

David Warner

டேவிட் வார்னரின் அற்புதமான தொடக்கம் ஒருபுறம் இருந்தாலும், 2வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த மிட்சல் மார்ஸ் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் போட்டியை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச்சென்றனர். ஒருபுறம் ஸ்டீவ் ஸ்மித் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபுறம் மிட்சல் மார்ஷ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 2வது விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை, மிட்சல் மார்ஸை 96 ரன்களில் வெளியேற்றி முடிவுக்கு கொண்டுவந்தார் குல்தீப் யாதவ். 84 பந்துகளில் 13பவுண்டரிகள், 3 சிக்சர்கள் விளாசி 96 ரன்களை குவித்த மிட்சல் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு வெளியேறினார்.

Steve Smith - Mitchell Marsh

இந்த நேரத்தில் இந்தியாவை ஆட்டத்திற்குள் எடுத்துவர நினைத்த முகமது சிராஜ் 74 ரன்னில் விளையாடிக்கொண்டிருந்த ஸ்டீவ் ஸ்மித்தையும் வெளியேற்றி அசத்தினார். தொடர்ந்து ஆஸ்திரேலியாவை நிமிரவே விடாத ஜஸ்பிரித் பும்ரா அலெக்ஸ் கேரி மற்றும் க்ளென் மேக்ஸ்வெல்லை 11, 5 ரன்களில் அடுத்தடுத்து வெளியேற்றி அசத்த, 40 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா தடுமாறியது.

கடைசிவரை நின்று ஆஸ்திரேலியாவை மீட்ட லபுசனே!

6 விக்கெட்டுகள் இழந்தாலும் மறுமுனையில் திடமாக நின்ற லபுசனே ஓவருக்கு ஒரு பவுண்டரிகளை விரட்டி ரன் விகிதத்தை குறையாமல் பார்த்துக்கொண்டார். 58 பந்துகளில் 9 பவுண்டரிகளை விரட்டி 72 ரன்களை குவித்த லபுசனே, 50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியாவை 352 ரன்களுக்கு எடுத்துச்சென்றார். இந்திய அணியை பொறுத்தவரையில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா 3 விக்கெட்டுகள் மற்றும் குல்தீப் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

Marnus

உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்படாத லபுசனே இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிவருகிறார். இதற்கு முன்னர் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்த ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றிருந்த லபுசனே, அப்போதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் நவீன கால சிறந்த கிரிக்கெட்டராக ஜொலித்துவரும் லபுசனே, ஒருநாள் கிரிக்கெட்டில் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார். இதனால் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியிலிருந்து அவரை நிர்வாகம் கழட்டிவிட்டது. இந்நிலையில் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தின் மூலம் ஆஸ்திரேலியா நிர்வாகத்தின் முடிவை கேள்விக்குறியாக்குள்ளார் லபுசனே.

Ind vs Aus

353 ரன்களை இலக்காக கொண்டு இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை விளையாடவிருக்கிறது. உலகக்கோப்பைக்கு இன்னும் ஒருவாரமே இருக்கும் நிலையில், இந்திய அணி இந்த சேஸிங்கை வெற்றிகரகமாக செய்ய வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு இந்திய ரசிகர்களிடையே அதிகமாக இருக்கிறது.