அடுத்தடுத்து 3 விக்கெட் வீழ்த்தி ஆட்டத்தை மாற்றிய அஸ்வின்! ஆஸியை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது இந்தியா.
Ind vs Aus
Ind vs AusTwitter

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டியை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்ற நிலையில், இரண்டாவது போட்டி இந்தூரில் இன்று தொடங்கியது.

சதமடித்து அசத்திய ஸ்ரேயாஸ்-கில்! 399 ரன்கள் சேர்த்த இந்தியா!

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இந்திய அணியை பேட்டிங் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே ருதுராஜை வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்தது ஆஸ்திரேலியா. ஆனால் இரண்டாவது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த ஸ்ரேயாஸ் மற்றும் கில் இருவரும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்து அசத்த, இந்திய அணி ரன்களை வேகமாக எடுத்தது.

Gill
Gill

என்ன செய்து இந்த கூட்டணியை பிரிப்பது என தெரியாமல் ஆஸ்திரேலிய பவுலர்கள் திணற, சிக்சர் பவுண்டரி என நாலாபுறமும் சிதறவிட்ட இந்த ஜோடி அடுத்தடுத்து சதமடித்து அசத்தினர். ஸ்ரேயாஸ் ஐயர் 90 பந்துகளில் 11 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 105 ரன்கள் அடிக்க, கில் 97 பந்துகளில் 6 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் பறக்கவிட்டு 104 ரன்கள் விளாசினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட இந்த ஜோடி இந்தியாவிற்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்தது. பின்னர் அடுத்தடுத்து வந்த கேப்டன் ராகுல் மற்றும் சூர்யகுமார் இருவரும் அரைசதம் அடித்து வானவேடிக்கை காட்ட இந்தியா 50 ஓவர் முடிவில் 399 ரன்கள் குவித்தது. மோசமான பந்துவீச்சை பெற்ற கேம்ரான் க்ரீன் 10 ஓவரில் 103 ரன்கள் கொடுத்தார்.

அடுத்தடுத்து 3 விக்கெட் வீழ்த்தி ஆட்டத்தை மாற்றிய அஸ்வின்!

400 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்திய ஆஸ்திரேலியாவிற்கு தொடக்கத்திலேயே கொத்தாக 2 விக்கெட்டை கழற்றி அதிர்ச்சி கொடுத்தார் பிரசித் கிருஷ்ணா. 9 ரன்னுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய ஆஸ்திரேலிய அணியை, மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வார்னர் மற்றும் லபுசனே இருவரும் சரிவிலிருந்து மீட்க போராடினர். சிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர் முதல் போட்டியை போன்றே இந்த போட்டியில் அரைசதம் அடித்து அசத்தினார்.

ind vs aus
ind vs aus

3வது விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்து வெற்றிநடை போட்ட இந்த ஜோடியை லபுசனேவை போல்டாக்கி வெளியேற்றி முடிவுக்கு கொண்டுவந்தார் அஸ்வின். பின்னர் அடுத்த ஓவரை வீச வந்த அஸ்வின், கண்ணை மூடி திறப்பதற்குள் என்ன நடந்தது என்பது போல் அடுத்தடுத்து வார்னர், இங்கிலீஸை வெளியேற்றி 101 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளாக மாற்றினார். தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி 217 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 99 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இறுதியில் களமிறங்கி தனியொரு ஆளாக போராடிய அப்பாட் 4 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் விளாசி 54 ரன்கள் சேர்த்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com