பயிற்சியின் போது ஆஸ்திரேலியா கேப்டன் மிட்செல் மார்ஷுக்கு இடுப்புப் பகுதியில் காய்ம் web
கிரிக்கெட்

T20 WC| ஆஸ்திரேலியா கேப்டன் மிட்செல் மார்ஷ் காயம்.. கம்பேக் கொடுக்கும் ஸ்டீவ் ஸ்மித்!

2026 டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவின் தொடக்க போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலியா கேப்டன் மிட்செல் மார்ஷுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

Rishan Vengai

2026 டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவின் கேப்டன் மிட்செல் மார்ஷ் காயம் காரணமாக முதல் போட்டியில் பங்கேற்க முடியவில்லை. அவருக்கு மாற்றாக ஸ்டீவ் ஸ்மித் இலங்கைக்கு பயணிக்கிறார். மார்ஷ் திரும்பவில்லை என்றால், ஸ்மித் ஆஸ்திரேலியாவின் கேப்டனாக செயல்படுவார்.

2026 டி20 உலகக்கோப்பை தொடரானது கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. ஒரு கோப்பைக்காக 20 அணிகள் பலப்பரீட்சை நடத்திவரும் நிலையில், ஒவ்வொரு ஆட்டமும் சுவாரசியம் பெற்றுவருகிறது.

2026 டி20 உலகக்கோப்பை

அமெரிக்கா, நேபாள், யுஏஇ போன்ற அணிகள் சிறப்பாக செயல்பட்டுவரும் நிலையில், பெரிய அப்செட்டை இந்த உலகக்கோப்பை காணும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் டெஸ்ட் விளையாடும் நாடுகள் மட்டுமில்லாமல் துணை நாடுகள் என அனைத்து அணிகளும் பல சாதனைகளை முறியடித்து வருகின்றன.

இந்நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் அயர்லாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா தங்களுடைய முதல் போட்டியில் விளையாடியது.

மிட்செல் மார்ஷ் காயம்..

அனைத்து பெரிய அணிகளும் டி20 உலகக்கோப்பையில் அறிமுக போட்டியை விளையாடிவிட்ட நிலையில், ஆஸ்திரேலியாவை எங்கப்பா காணும் என ரசிகர்கள் ஆஸ்திரேலியாவின் போட்டிக்காக காத்திருந்தனர். ஆனால் இன்றைய அயர்லாந்துக்கு எதிரான முதல் போட்டியில் முன்னதாக ஆஸ்திரேலியா ரசிகர்களுக்கு அதிர்ச்சியான செய்தி காத்திருந்தது.

போட்டிக்கு முந்தைய பயிற்சியின் போது ஆஸ்திரேலியா கேப்டன் மிட்செல் மார்ஷுக்கு இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவரால் முதல் போட்டியில் பங்கேற்க முடியவில்லை என்றும், அவர் தொடர்ந்து ஓய்வில் இருக்க மருத்துவக்குழு அறிவுறுத்தியிருப்பதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா கூறியுள்ளது. அவரால் இரண்டாவது போட்டியிலும் பங்கேற்க முடியாத சூழல் உள்ளதாகவும், அவருக்கு மாற்று வீரராக ஸ்டீவ் ஸ்மித் இலங்கைக்கு பயணிப்பார் என்றும் தெரிவித்துள்ளது.

அயர்லாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் மிட்செல் மார்ஷுக்கு பதிலாக டிராவிஸ் ஹெட் கேப்டனாக செயல்பட்ட நிலையில், ஒருவேளை மார்ஷ் திரும்பவில்லை என்றால் ஆஸ்திரேலியாவின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் செயல்படுவார் என சொல்லப்படுகிறது. பிக்பாஸ் லீக்கில் ஸ்டீவ் ஸ்மித் அதிரடியான ஃபார்மில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.