australia beat india in 2024-2025 BGT Series x
கிரிக்கெட்

10 வருட தோல்விக்கு பின் தரமான வெற்றி.. இந்தியாவை 3-1 என வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது ஆஸ்திரேலியா!

இந்தியாவுக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் பார்டர் கவாஸ்கர் தொடரை 3-1 என வென்று தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது ஆஸ்திரேலியா அணி.

Rishan Vengai

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் பங்கேற்று விளையாடியது. பரபரப்பாக தொடங்கிய டெஸ்ட் தொடரில் பெர்த்தில் நடந்த முதல் போட்டியிலேயே வெற்றிபெற்ற இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. ஆனால் அதற்கு அடுத்த டெஸ்ட்டை வென்ற ஆஸ்திரேலியா 1-1 என தொடரை சமன்செய்த நிலையில், 3வது டெஸ்ட் போட்டியானது சமனில் முடிந்தது.

இந்நிலையில் தொடர் யாருக்கு என்பதை உறுதிசெய்யும் முயற்சியில் இரண்டு அணிகளும் தீவிரமாக செயல்பட்ட நிலையில், 4வது டெஸ்ட் போட்டியின் கடைசி செஸ்ஸனில் 7 விக்கெட்டுகளை பறிகொடுத்த இந்திய அணி அதிர்ச்சிகரமான தோல்வியை சந்தித்தது. இதனால் 4 போட்டிகளின் முடிவில் 2-1 என ஆஸ்திரேலியா அணி முன்னிலை பெற்றது.

australia

இந்த சூழலில் 5வது டெஸ்ட் போட்டியில் வென்று தொடரை 2-2 என சமன் செய்யும் முயற்சியிலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பை தக்கவைக்கும் முயற்சியிலும் இந்தியா களமிறங்கியது. ஆனால் கடைசி டெஸ்ட் போட்டியில் பும்ராவிற்கு காயம் ஏற்பட்டது இந்தியாவிற்கு பாதகமாக அமைந்த நிலையில், ஆஸ்திரேலியா 5வது டெஸ்ட் போட்டியில் எளிதான வெற்றியை பதிவுசெய்து 3-1 என பார்டர் கவாஸ்கர் தொடரை வென்றுள்ளது.

10 வருட காத்திருப்பிற்கு பின் தரமான வெற்றி..

பார்டர் கவாஸ்கர் தொடரில் ஒரு தசாப்தமாக இந்தியாவை ஆஸ்திரேலியாவால் வெற்றிபெற முடியவில்லை, இதில் சோகம் என்னவென்றால் சொந்த மண்ணில் இரண்டு முறை இந்தியாவிற்கு எதிராக டெஸ்ட் தொடரை இழந்திருந்தது ஆஸ்திரேலியா அணி.

ind vs aus

கடைசியாக 2014-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரை 2-0 என வென்றிருந்தது ஆஸ்திரேலியா அணி. அதற்குபிறகு 2017-ல் 2-1, 2018-19ல் 2-1, 2021-ல் 2-1, 2023-ல் 2-1 என 4 முறை தொடர்ச்சியாக இந்தியா பார்டர் கவாஸ்கர் தொடரை வென்று ஆதிக்கம் செலுத்தியது.

2024-2025 BGT AUS

இந்நிலையில் 10 வருடங்களுக்கு பிறகு 4 தொடர் தோல்விக்கு பிறகு முதல்முறையாக ஆஸ்திரேலியா அணி 3-1 என 2024-2025 பார்டர் கவாஸ்கர் தொடரை வென்று அசத்தியுள்ளது.

பும்ரா

கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டியில் இந்தியா நிர்ணயித்த 161 ரன்கள் இலக்கை எட்டிய ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவுசெய்தது. ஆட்ட நாயகனாக ஸ்காட் போலண்ட்டும், தொடர் நாயகனாக ஜஸ்பிரித் பும்ராவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.