india team
india team twitter
கிரிக்கெட்

AsianGames2023: சாய் கிஷோர், வாஷிங்டன் சுழலில் சுருண்ட வங்கதேசம்.. இறுதிப்போட்டியில் இந்திய அணி!

Prakash J

முதல்முறையாக தங்கம் வென்ற இந்திய மகளிர் அணி

19-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வருகின்றன. கடந்த செப். 23ஆம் தேதி தொடங்கிய இப்போட்டிகள் அக்டோபர் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கிரிக்கெட்டும் இடம்பெற்றது. முன்னதாக இதன் மகளிர் போட்டியில் இந்திய அணி முதல்முறையாக தங்கம் வென்று சாதனை படைத்தது.

india team

அரையிறுதியில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய ஆடவர் அணி!

இந்த நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய ஆடவர் அணி, இன்று (அக். 6) அரையிறுதிப் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்டது. இன்றைய போட்டியில் டாஸ் ஜெயித்த இந்திய அணி கேப்டன் ருதுராஜ், வங்கதேசத்தை பேட் செய்ய பணித்தார். அதன்படி, முதலில் பேட் செய்த வங்கதேச அணியில் தொடக்க பேட்டர் பர்வேஷ் மட்டும் கொஞ்ச நேரம் நிலைத்து நின்று விளையாடி 23 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்டர்கள் எல்லாம் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினர்.

இறுதியில் விக்கெட் கீப்பர் ஜாஹீர் அலி 24 ரன்களும் ரஹிபுல் ஹாசன் 14 ரன்களும் எடுக்க, அவ்வணி நிர்ணயிக்கப்பட்ட் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்தது. இதில் எக்ஸ்ட்ராகவாக 13 ரன்களும் அடக்கம். இந்திய அணி தரப்பில் சிறப்பாகப் பந்துவீசிய தமிழக வீரர் சாய் கிஷோர் 3 விக்கெட்களை வீழ்த்தினார். மற்றொரு தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதையும் படிக்க: ’காவி’க்கு மாறிய இந்திய வீரர்கள்! - கன்பியூஸ் ஆன ரசிகர்கள்!

அதிரடியில் கலக்கி வெற்றிக்கு வித்திட்ட ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா!

பின்னர் எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு, தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. கடந்த நேபாளத்துக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் சதம் அடித்து சாதனை படைத்து யாஷஸ்வி ஜெய்ஸ்வால், இந்தப் போட்டியில் டக் அவுட் முறையில் வீழ்ந்து ரசிகர்களை ஏமாற்றினார். எனினும், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் திலக் வர்மா ஆகிய இருவரும் இணைந்து வெற்றியை நோக்கி இந்தியாவை அழைத்துச் சென்றனர். அவர்கள் இருவரும் அதிரடியாக ஆடி, 9.2 ஓவர்களிலேயே இந்தியாவை வெற்றிபெற வைத்தனர்.

முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 97 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன் ஆசிய விளையாட்டுத் தொடரில் இறுதிப் போட்டிக்கும் தகுதிபெற்றது. ருதுராஜ் 26 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸருடன் 40 ரன்களும், திலக் வர்மா 26 பந்துகளில் 2 பவுண்டரி, 6 சிக்ஸருடன் 55 ரன்களும் எடுத்து இறுதிவரை களத்தில் இருந்தனர்.

india team

இறுதிப்போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ளும் இந்திய அணி!

இதன்மூலம் ஆசிய விளையாட்டில், இந்திய அணி மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற மற்றொரு அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, அந்த அணியை இறுதிப்போட்டியில் இந்திய அணி எதிர்கொள்ள இருக்கிறது.

இதையும் படிக்க: ஆசிய விளையாட்டுப் போட்டி: பதக்கங்களைக் குவித்து இந்தியா வரலாற்று சாதனை...!