ஆசியக் கோப்பையில் ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவூஃப் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
துபாயில், சமீபத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா 9வது முறையாக சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. அப்போது ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வியிடமிருந்து கோப்பையைப் பெற இந்தியா மறுத்தது. இதையடுத்து, அந்தக் கோப்பையை மொஹ்சின் நக்வி கொண்டு சென்றார். இந்திய அணியினர் கோப்பை இல்லாமலேயே வெற்றியைக் கொண்டாடினர். இவ்விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும், இந்திய வீரர்களின் இந்தச் செயல் உலகம் முழுவதும் பரவலாக விமர்சிக்கப்பட்டது. விளையாட்டில் அரசியல் கூடாது என அறிவுரைகளும் வழங்கப்பட்டன. அதேநேரத்தில், இந்தக் கோப்பையை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என பிசிசிஐயும் வலியுறுத்தியது. ஆனால், இந்திய அணிக்கு ஆசியக் கோப்பையை வழங்கும் நிகழ்ச்சியை வைத்திருப்பதாகவும், இதில் தவறாமல் இந்திய அணி வீரர்களும் கேப்டன் சூர்யகுமார் யாதவும் கலந்துகொள்ள வேண்டும்’என நக்வி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஐசிசி கூட்டத்தில் பிசிசிஐ முறையிட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில், ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின்போது இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டியில் வீரர்கள் மிகவும் ஒழுங்கீனமாக நடந்துகொண்டார்கள். இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்க மறுத்தனர். பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ராஃப் விமானம் விழுந்து நொறுங்குவது போன்று சைகை காட்டினார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதை தெரிவிக்கும் வகையில் அவ்வாறு சைகை காட்டினார் என இந்தியா குற்றம்சாட்டியது. போட்டி முடிந்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது, இந்தியா- பாகிஸ்தான் மோதலின்போது, உயிரிழந்தவர்களுக்கு வெற்றியை அர்ப்பணிப்பதாகவும், அவர்களுடன் நிற்பதாகவும் சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, இருநாட்டின் கிரிக்கெட் சங்கங்களும் ஐசிசியில் புகார் அளித்தது. இதனடிப்படையில் ஹாரிஸ் ராஃப்க்கு 2 போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ளது. சூர்யகுமார் யாதவுக்கு போட்டியின் கட்டணத்தில் 30 சதவீதம் அபராதம் விதித்துள்ளது. ஜஸ்பிரித் பும்ரா ஒரு தகுதி இழப்பு புள்ளியைப் பெற்றார், அதே நேரத்தில் அர்ஷ்தீப் சிங் மற்றும் சாஹிப்சாதா ஃபர்ஹான் ஆகியோரும் எந்த அபராதமும் இல்லாமல் விடுவிக்கப்பட்டனர். ஏ.கே.47 துப்பாக்கியால் சுடுவது போன்று சைகை காட்டிய பாகிஸ்தான் தொடக்க வீரர் பர்ஹானுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படவில்லை.