ஏசிசி ஆண்கள் ஆசியக் கோப்பை தொடரில் இந்திய ஏ அணி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. ஓமன் அணியை எதிர்த்து 136 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஏமாற்றிய போதிலும், ஹர்ஷ் துபே மற்றும் நேகல் வதேரா இணைந்து வெற்றியை உறுதி செய்தனர். ஹர்ஷ் துபே 53 ரன்கள் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
ஏசிசி ஆண்கள் ஆசியக் கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் 2025 தொடர் கத்தாரில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இந்தியா ஏ, ஆப்கானிஸ்தான் ஏ, இலங்கை ஏ, வங்கதேசம் ஏ, ஓமன், ஹாங்ஹாங், ஐக்கிய அரபு, பாகிஸ்தான் ஷாகீன்ஸ் ஆகிய 8 அணிகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு விளையாடி வருகின்றன. இதில் ஜித்தேஷ் சர்மா தலைமையிலான இந்திய ஏ அணி பி பிரிவில் இடம்பிடித்துள்ளது. இந்த தொடரின் முதல் லீக் போட்டியில் ஐக்கிய அரபு அணிக்கு எதிராக வெற்றிவாகை சூடிய இந்திய அணி, அடுத்து நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வியைத் தழுவியது. எனினும் இவ்விரு போட்டிகளிலும் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி (144 & 45) சிறப்பாக விளையாண்டார்.
இந்த நிலையில், தனது கடைசி லீக் போட்டியில் பிரிவில் இடம்பெற்றிருந்த ஓமன் அணியை இந்திய அணி நேற்று சந்தித்தது. இதில் டாஸ் ஜெயித்த இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஓமன் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. அவ்வணியில் ஆட்டமிழக்காமல் வாசிம் அலி 54 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஹமாது மிஸ்ரா 32 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் குர்ஷபனீத் சிங் மற்றும் ஷியாஷ் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். விஜயகுமார், ஹர்ஷ், நமன் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்திலேயே விக்கெட்டை இழந்தது. கடந்த இரண்டு போட்டிகளில் ருத்ர தாண்டவம் ஆடிய வைபவ் சூர்யவன்ஷி, இந்தப் போட்டியில் ஏமாற்றினார். அவர், 12 ரன்களில் வெளியேறினார். அவருடன் இறங்கிய மற்றொரு தொடக்க வீரரான ப்ரியன்ஷ் ஆர்யாவும் 10 ரன்களில் அவுட்டானார். ஆனால் நமன் தீர் மற்றும் ஹர்ஷ் துபே இருவரும் இணைந்து வெற்றிக்கு வித்திட்டனர். நமன் 30 ரன்களில் வெளியேறினாலும், ஹர்ஷ் துபே அரைசதம் அடித்ததுடன், இறுதிவரை களத்தில் நின்று அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவர் 44 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார்.
அதில் 7 பவுண்டரியும் 1 சிக்ஸரும் அடக்கம். அவருக்கு துணையாக நேகல் வதேரா 23 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 17.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது. இந்த வெற்றியின் இந்திய அரையிறுதிக்குள்ளும் நுழைந்துள்ளது.