pak team x page
கிரிக்கெட்

Asiacup| தாமதமாகத் தொடங்கிய போட்டி.. நடுவரின் தலையில் தாக்கிய பந்து.. சூப்பர் 4க்கு முன்னேறிய PAK!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணி தன்னுடைய கடைசி லீக் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தி, சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Prakash J

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணி தன்னுடைய கடைசி லீக் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தி, சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இந்திய வீரர்கள் கைகுலுக்காத சர்ச்சை

8 அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கடந்த 14ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் பலப்பரீட்சை நடத்தின. இதில், இந்திய அணி வெற்றி பெற்றபோதும், இந்தப் போட்டிக்குப் பிறகு இந்திய வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களுக்கு கைகுலுக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது. முன்னதாக, டாஸ் போட்டபோதும் இரு அணி கேப்டன்களும் கை குலுக்கிக் கொள்ளவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) தனது எதிர்ப்பைப் பதிவு செய்ததுடன் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிலும் புகாரைப் பதிவு செய்தது. மேலும், ”இதற்கு பொறுப்பாக போட்டி நடுவா் ஆண்டி பைக்ராஃப்ட்டை (ஜிம்பாப்வே) பாகிஸ்தான் அணியுடன் நடைபெறும் எல்லாப் போட்டிகளிலிருந்தும் நீக்க வேண்டும்” என ஐசிசியிடமும் பாகிஸ்தான் புகார் அளித்தது. ஆனால் இப்புகாரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிராகரித்த நிலையில், போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட்டுக்கு பதிலாக ரிச்சி ரிச்சர்ட்சன் பாகிஸ்தான் போட்டிகளில் நியமிக்கப்படுவார் எனத் தெரிவித்தது.

Andy Pycroft, indvpak

அடுத்த சுற்றுக்கு முன்னேறிய பாகி.

இந்த நிலையில், ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய கடைசி லீக் ஆட்டத்தில், ஐக்கிய அரபு அமீரகத்தை பாகிஸ்தான் அணி எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் டாஸ் ஜெயித்த ஐக்கிய அரபு அமீரகம் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணியில், தொடக்க வீரர்கள் ஏமாற்றிய நிலையிலும், ஃபகார் ஜமான் 50 ரன்களும், கேப்டன் சல்மான் 20 ரன்களும், ஷகீன் அப்ரிடி 29* ரன்களும் எடுக்க அந்த அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. அமீரகம் தரப்பில் ஜூனைத் சித்திக் 4 விக்கெட்களையும், சிங் ஹாங் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். பின்னர் 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அமீரக அணியில் விக்கெட் கீப்பர் ராகுல் சோப்ரா 35 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலையான ஆட்டத்தைத் தராததால், அந்த அணி 17.4 ஓவர்களில் 105 ரன்களுக்குச் சுருண்டது. இதையடுத்து, 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, இந்தியாவை தொடர்ந்து சூப்பர் 4 சுற்றுக்கும் முன்னேறியது. இத்தொடரில் பங்கேற்ற யுஏஇ மற்றும் ஓமன் அணிகள் முறையே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெறியேறின.

நடுவரின் தலையில் தாக்கிய பந்து

இதற்கிடையே, ஐக்கிய அரபு அமீரகம் பேட் செய்து கொண்டிருந்தபோது, பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் வீசிய ஒரு த்ரோ, எதிர்பாராத விதமாக கள நடுவரான ருசிரா பள்ளியகுருகேவின் தலையின் பக்கவாட்டில் பலமாகத் தாக்கியது. இதனால் நிலைகுலைந்த அவர், வலியால் தலையைப் பிடித்தபடி துடித்தார். இதையடுத்து, உடனடியாக, பாகிஸ்தான் அணியின் பிசியோதெரபிகள் ஓடிச் சென்று அவரது நிலைமையைச் சோதித்தனர். தலையில் ஏற்பட்ட காயத்தால், அவர் தொடர்ந்து போட்டியில் நடுவராகப் பணியாற்ற முடியாத நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து, ருசிரா பள்ளியகுருகே மைதானத்தை விட்டு வெளியேறினார். அவருக்குப் பதிலாக, இந்தப் போட்டிக்கு மாற்று நடுவராக இருந்த காசி சோஹேல், கள நடுவராகப் பொறுப்பேற்றார்.

தாமதமாகத் தொடங்கிய போட்டி

முன்னதாக, ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் போட்டி நடுவர் ஆண்டி பைக்கிராஃப்ட் விவகாரத்தால், பாகிஸ்தான் போட்டி ஒரு மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது. இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தில் கைகுலுக்கல் நடக்காததற்கு பைக்கிராஃப்ட்தான் காரணம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் புகார் அளித்தது. பைக்கிராஃப்ட்டை நீக்க வேண்டும் என பாகிஸ்தான் கோரிக்கை விடுத்தது. இல்லையென்றால் போட்டியில் பங்கேற்க மாட்டோம் என்றும் மிரட்டியது. ஐசிசி இதை ஏற்காததால், பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதன்காரணமாக நேற்றைய போட்டி ஒரு மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது.