MI Trades
MI Trades Cricinfo
கிரிக்கெட்

“MI-ன் சிறந்த டிரேடிங் Hardik இல்லை.. இவர்தான்; மும்பை ஈசியா வழிப்பறி பண்ணிட்டாங்க!” - அஸ்வின்

Rishan Vengai

2024 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் நடைபெற உள்ளது. 333 வீரர்கள் பங்கேற்கும் ஒரு மெகா ஏலத்திற்கு இன்னும் 6 நாட்களே மீதம் உள்ள நிலையில், எத்தனை வீரர்கள் என்னென்ன ஸ்லாட்டில் பதிவுசெய்துள்ளனர் என்கிற முழு விவரத்தையும் ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

IPL Auction

ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டிருக்கும் செய்தியின் படி, 2024 ஐபிஎல் ஏலத்தில் மொத்தமாக 333 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். அதில் 214 இந்திய வீரர்கள் மற்றும் 119 வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர். 2 வீரர்கள் அசோசியேட் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல 333 வீரர்களில் மொத்தமாக 116 Capped (சர்வதேச போட்டிகளில் விளையாடுபவர்கள்) வீரர்கள், 215 Uncapped வீரர்கள் பதிவுசெய்துள்ளனர். மொத்தமாக 77 வீரர்கள் விலைக்கு வாங்கப்படவிருக்கின்றனர், அதில் 30 இடங்கள் வெளிநாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Mumbai Indians

அதிகபட்சமாக குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 38 கோடியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் 34 கோடியும், கொல்கத்தா அணியிடம் 32.7 கோடியும், சென்னை அணியிடம் 31.4 கோடியும் இருப்பு உள்ளன. அடுத்த இடத்தில் 29 கோடியுடன் பஞ்சாப் அணியும், 28.9 கோடியுடன் டெல்லி கேபிடல்ஸ் அணியும், 23.4 கோடியுடன் பெங்களூரு அணியும் உள்ளன. குறைந்த பட்சமாக மும்பையிடம் 17.7 கோடியும், ராஜஸ்தான் அணியிடம் 14.5 கோடியும், லக்னோ அணியிடம் 13.15 கோடியும் மீதமுள்ளன.

ஒரு வீரருக்கு அதிகபட்ச விலைக்கு செல்லவிருக்கும் மும்பை இந்தியன்ஸ்!

குறைந்தபட்ச தொகையை வைத்திருந்தாலும் மும்பை இந்தியன்ஸ் அணி அவர்களுடைய அனைத்து ஸ்லாட்களையும் டிக் செய்துள்ளனர். எதிர்வரும் ஏலத்தில் அவர்கள் ஒரு வேகப்பந்துவீச்சாளருக்கு நிச்சயம் 15 கோடிவரை செல்வார்கள், அது மிட்செல் ஸ்டார்க் அல்லது மதுஷங்கா அல்லது பாட் கம்மின்ஸாக கூட இருக்கலாம்.

Starc

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியாவின் டிரேடிங்தான் எல்லோராலும் மிகைப்படுத்தி பேசப்படும் நிலையில், இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஹர்திக் பாண்டியாவை விட ரொமாரியோ ஷெப்பர்ட்டின் வர்த்தகத்தை பாசிட்டிவாக பேசியுள்ளார். ‘மும்பை அணி போனஸாக போகிற வழியில் வழிப்பறி செய்தது போல் ஷெப்பர்டை தட்டிப்பறித்துவிட்டு சென்றுவிட்டது’ என அஸ்வின் கூறியுள்ளார்.

இந்த வீரரை மும்பை அணி வழிப்பறி செய்துவிட்டது! - அஸ்வின்

தன்னுடைய யூ-டியூப் பக்கத்தில் பேசியிருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், மும்பை இந்தியன்ஸ் அணியின் சிறந்த வர்த்தகமாக ஹர்திக் பாண்டியாவை விட ஷெப்பர்டின் வர்த்தகத்தை கூறினார். இதுகுறித்து அவர் பேசுகையில், “மும்பை இந்தியன்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிடமிருந்து கிட்டத்தட்ட வழிப்பறி செய்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். எப்படி LSG ரொமாரியோ ஷெப்பர்ட்டை எளிதாக வெறும் 50 லட்சத்திற்கு வெளியிட்டது என்று தெரியவில்லை. சமீபத்தில்கூட இங்கிலாந்துக்கு எதிராக பேட்டிங் பவுலிங் என இரண்டிலும் கலக்கி இருந்தார் ஷெப்பர்ட்.

Romario Shepherd

அவர் ஒரு உயரமான பேட்ஸ்மேன், பந்தை தூரத்தில் தூக்கி அடிக்கக்கூடிய குவாலிட்டியை வைத்திருக்கிறார். மும்பை ஏற்கெனவே இதேபோலான டிம் டேவிட், ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்களை வைத்துள்ளது. அவர்களுடன் ஷெப்பர்டும் சேர்வது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு பெரிய அசுரபலம் போன்றது” என்று கூறியுள்ளார்.

Romario Shepherd

சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்துக்கு எதிராக 25 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு வரலாற்று ஒருநாள் தொடர் வெற்றியை பதிவுசெய்தது. அந்த வெற்றியில் ரொமாரியோ ஷெப்பர்ட்டின் பங்கு மிக அதிகம். சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் பவுலிங்கில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஷெப்பர்ட், அணி சரிவில் இருந்த போது 3 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என பேட்டிங்கிலும் கலக்கிய அவர், வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒரு வரலாற்று வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.