எதிர்வரும் 2024 ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு ஹர்திக் பாண்டியாவை ரூ.15 கோடி கொடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து வாங்கியுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய வர்த்தகமாக பார்க்கப்படும் இந்த டிரேடிங்கில் குஜராத் டைட்டன்ஸ் அணி மகிழ்ச்சியடையவில்லை என்பது தெரிகிறது. அதனால் தான் மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து எந்தவிதமான மாற்றுவீரரையும் பெற்றுக்கொள்ளாமல் அப்படியே டிரேட் செய்துள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி.
ஹர்திக் பாண்டியாவின் டிரேட் குறித்து பேசியிருந்த டைட்டன்ஸ் அணியின் இயக்குநர் கூட, “தன்னுடைய அசல் அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கே திரும்ப ஹர்திக் பாண்டியா விருப்பம் தெரிவித்தார். அவரது முடிவை நாங்கள் மதிக்கிறோம். அவருடைய எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம்” என சுருக்கமாக கூறியிருந்தார். இந்நிலையில் குஜராத் அணிக்கும், ரசிகர்களுக்கும் ஒரு விடைபெறும் செய்தியை வெளியிட்டுள்ளார் ஹர்திக் பாண்டியா.
தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் ஹர்திக், “குஜராத் டைட்டன்ஸ் அணியின் ரசிகர்கள், அணி மற்றும் நிர்வாகத்திற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். டைட்டன்ஸ் அணியின் ஒரு பகுதியாக இருந்ததும், அதை வழிநடத்தியதும் எனக்கு கிடைத்த ஒரு முழுமையான கவுரவமாகும். உங்களிடமிருந்து எனது குடும்பத்தினருக்கும், ஒரு பிளேயராக எனக்கும் கிடைத்த அன்பு மற்றும் ஊக்கத்திற்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.
GT உடனான நினைவுகளும் அனுபவங்களும் என்றென்றும் என் இதயத்தில் ஒரு சிறப்பான இடத்தில் இருக்கும். மறக்க முடியாத பயணத்திற்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.