jadeja - akeal hosein web
கிரிக்கெட்

“ஜடேஜாவிடம் அந்த திறமை இல்லை; அகீல் ஹொசைன் அதில் சிறந்தவர்” - ரவிச்சந்திரன் அஸ்வின்

பவர்பிளேவில் அகீல் ஹொசைன் சிறப்பாக பந்துவீசுவதாகவும், ஐபிஎல்லில் ஜடேஜா இத்தனை வருடம் பந்துவீசினாலும் அவரிடம் அகீல் ஹொசைன் வைத்திருக்கும் பந்துவீச்சுமுறை இல்லை என்று அஸ்வின் பாராட்டியுள்ளார்.

Rishan Vengai

2026 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் இடதுகை ஸ்பின்னர் அகீல் ஹொசைன் பவர்பிளே ஓவர்களில் காட்டும் ஆட்டத்தை ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் பாராட்டுகிறார். காற்றில் பந்தை நிறுத்தி வீசும் ஆர்ம் பால் திறமையால் அவர் பேட்ஸ்மேன்களை குழப்புவதாகவும், இந்த வேரியசன் ஜடேஜாவிடம் இல்லாத தனிச்சிறப்பு எனவும் அஸ்வின் விளக்குகிறார்.

2026 ஐபிஎல் தொடரில் சிறந்த ஸ்பின்னர்கள் ஜோடியை வைத்திருக்கும் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் திகழ்ந்துவருகிறது. ஸ்பின்னர்கள் மீது நம்பிக்கையில்லாத சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த போட்டிகளாக அகீல் ஹொசைன் மீது நம்பிக்கை வைத்து பவுலிங் கொடுக்கிறார். நூர் அகமது, அகீல் ஹொசைன் இருவரும் சேர்ந்து சிறந்த ஸ்பின் ஜோடியாக மிரட்டி வருகின்றனர்.

அகீல் ஹொசைன், சிஎஸ்கே

பவர்பிளேவில் சிறப்பாக பந்துவீசும் அகீல் ஹொசைன், தன்னுடைய நுணுக்கமான பந்துவீச்சால் தொடக்கத்திலேயெ விக்கெட்டை சாய்க்கிறார். அது அதற்குபிறகு மிடில் ஓவரில் பந்துவீசவரும் நூர் அகமதுவிற்கு சிறந்த களத்தை அமைத்து கொடுக்கிறது.

இந்தசூழலில் தான் அகீல் ஹொசைன் ஏன் பவர்பிளேவில் சிறப்பாக இருக்கிறார், அவரிடம் என்ன திறமை இருக்கிறது என்று விளக்கம் கொடுத்து பேசியுள்ளார் முன்னாள் சிஎஸ்கே வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்.

தன்னுடைய யூடியூப் சேனலில் பேசியிருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், நடப்பு ஐபிஎல் தொடரில் சில இடதுகை ஸ்பின்னர்களே பவர்பிளேவில் சிறப்பாக பந்துவீசுவதாகவும், அதில் அகீல் ஹொசைனிடம் உள்ள தனித்திறமை அற்புதமாக இருப்பதாகவும் புகழ்ந்து பேசியுள்ளார்.

காற்றில் பந்தை நிறுத்தி வீசும் ஆர்ம் பால் திறமையை கொண்டிருக்கும் அகீல் ஹொசைனின் பந்துவீச்சுமுறை, ஸ்பின்னர்களின் ஜாம்பவான் பிஷன் சிங் பேடியே பெருமைப்படும் அளவில் இருப்பதாக புகழ்ந்துள்ளார். மேலும் அகீல் ஹொசைனிடம் இருக்கும் இந்த ஆர்ம் பால் பந்துவீச்சுமுறை பல வருடங்களாக ஐபிஎல்லில் விளையாடிவரும் ஜடேஜாவிடம் கூட இல்லை என்றும் பேசியுள்ளார்.

ஜடேஜா

வீடியோவில் பேசியிருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், “ஜடேஜா ஐபிஎல் தொடங்கியதிலிருந்தே விளையாடி வருகிறார், ஆனாலும் அவரிடம் இன்னமும் ஆர்ம் பால் வீசும் திறன் இல்லை. இதுவே அகீலை மிகவும் கடினமானவராகவும், வித்தியாசமானவராகவும் ஆக்குகிறது.

ஜடேவிடம் இருப்பது இயற்கையான ஆர்ம் பால், ஆனால் அகீல் ஹொசைன் காற்றில் பந்தை சுழற்றி நிறுத்தி வீசுகிறார். அந்த ஆர்ம் பால் பேட்ஸ்மேன்களுக்கு எந்த பக்கம் திரும்புகிறது, அவுட்சைடு எட்ஜ் ஆகுமா அல்லது இன்சைடு எட்ஜ் ஆகுமா என்ற சந்தேகத்தை எழுப்புவதோடு, இந்த லெந்தில் தான் பந்துவிழப்போகிறது என்று தவறாகவும் கணிக்க வைக்கிறது. இதுதான் ஜடேஜாவிடமிருந்து அகீல் ஹொசைனை வேறுபடுத்துகிறது. இந்த வேரியசனை வைத்து தான் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக டி-காக்கையும், நமன் திர் விக்கெட்டையும் அகீல் ஹொசைன் சாய்த்தார்.

ஆர்ம் பாலை பொறுத்தவரை பந்தைக் காற்றில் ஸ்விங் செய்வது என்பது முற்றிலும் வேறுபட்ட ஒரு விஷயம். அது பிஷன் சிங் பேடி பெருமைப்படும்படியான ஒரு பழங்கால பாணியாகும்” என்று பேசியுள்ளார்.