Ravichandran Ashwin
Ravichandran Ashwin X
கிரிக்கெட்

அவசரமாக சென்னை திரும்பிய அஸ்வின்! 3வது டெஸ்ட் போட்டியிலிருந்து திடீர் விலகல்!

Rishan Vengai

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் சாக் கிராவ்லியின் விக்கெட்டை வீழ்த்திய பிறகு, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற மைல்கல் சாதனையை எட்டினார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

500 டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்திய உலக கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில், முத்தையா முரளிதரன், ஷேன் வார்னே, ஜேமி ஆண்டர்சன், அனில் கும்ப்ளே, ஸ்டூவர்ட் பிராட், க்ளென் மெக்ராத், வால்ஸ், நாதம் லயன் முதலிய 8 வீரர்களுக்கு பிறகு 500 டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்திய 9வது உலக பவுலராக அஸ்வின் சாதனை படைத்துள்ளார்.

ஒரு பெரிய மைல்கல் சாதனையொட்டி சச்சின், அனில்கும்ப்ளே, நாதன் லயன் முதலிய கிரிக்கெட் ஜாம்பவான்கள் முதல் உலக கிரிக்கெட் ரசிகர்கள் வரை அனைவரும் அஸ்வினுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அஸ்வின் அவசரமாக சென்னை திரும்பியிருப்பதாகவும், குடும்ப எமெர்ஜென்சி காரணமாக 3வது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியிருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

3வது டெஸ்ட் போட்டியிலிருந்து அஸ்வின் விலகல்!

தங்களுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருக்கும் பிசிசிஐ, “குடும்ப நெருக்கடி காரணமாக இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியிலிருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகியுள்ளார். இந்த சவாலான காலங்களில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (பிசிசிஐ) இந்திய அணியும் அஸ்வினுக்கு முழு ஆதரவு அளிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.

மேலும், “அஸ்வினின் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கும் பிசிசிஐ, அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தயாராக இருப்பதாகவும்” தெரிவித்துள்ளது.