பிசிசிஐ விளையாட்டில் அரசியலை புகுத்தியது கிடையாது என அஸ்வின் பாராட்டு web
கிரிக்கெட்

"பிசிசிஐ ஒருபோதும் விளையாட்டில் அரசியலை புகுத்தியது கிடையாது.." - அஸ்வின் பாராட்டு

பிசிசிஐ எப்போதும் விளையாட்டில் அரசியலை புகுத்தியது கிடையாது என அஸ்வின் பாராட்டி பேசியுள்ளார்.

Rishan Vengai

வங்கதேசம் 2026 டி20 உலகக்கோப்பையிலிருந்து விலகிய நிலையில், பாகிஸ்தானும் இந்தியாவிற்கு எதிராக விளையாட மாட்டோம் என அறிவித்துள்ளது. இதற்கு முன்னாள் இந்திய வீரர் அஸ்வின், பிசிசிஐ விளையாட்டில் அரசியலை புகுத்தியதில்லை என பாராட்டியுள்ளார். பிசிசிஐ எப்போதும் அரசியலையும் விளையாட்டையும் தனித்தனியாக பார்த்துள்ளது என அவர் கூறியுள்ளார்.

2026 டி20 உலகக்கோப்பையிலிருந்து வங்கதேசம் விலக முடிவுசெய்தது, இந்தியாவிற்கு வந்து விளையாட மாட்டோம் என வங்கதேசம் கூறியதால் அவர்களுக்கு பதிலாக ஸ்காட்லாந்து விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தை தொடர்ந்து பாகிஸ்தானும் தற்போது இந்தியாவிற்கு எதிரான போட்டியில் மட்டும் விளையாட மாட்டோம், ஆனால் டி20 உலகக்கோப்பையில் விளையாடுவோம் என கூறியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

இவ்விவகாரம் பேசுபொருளாகியுள்ள நிலையில், முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், பிசிசிஐ ஒருபோதும் விளையாட்டில் அரசியலை புகுத்தியதில்லை என பாராட்டியுள்ளார்.

பிசிசிஐ விளையாட்டில் அரசியல் செய்தது இல்லை..

வங்கதேசம் விளையாட மறுப்பு தெரிவித்த போது, அதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, "வங்கதேசம் விளையாட வேண்டும் என்று தான் நாங்கள் விரும்பினோம், முழு பாதுகாப்பையும் உறுதி செய்தோம், ஆனால் அவர்கள் இந்த முடிவை எடுத்ததால், கடைசி நேரத்தில் முழு அட்டவணையையும் மாற்றுவது மிகவும் கடினம். அதனால்தான் அவர்களுக்கு பதிலாக ஸ்காட்லாந்து கொண்டு வரப்பட்டது.

பாகிஸ்தான் எந்த காரணமும் இல்லாமல் இந்த விஷயத்தில் தலையிட்டு வங்கதேசத்தைத் தூண்டிவிடுகிறது. வங்கதேச மக்கள் மீது பாகிஸ்தான் செய்த கொடூரம் அனைவருக்கும் தெரியும், இப்போது பாகிஸ்தான் வங்கதேசத்தை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார்கள், இது முற்றிலும் தவறு" என குற்றஞ்சாட்டியிருந்தார்.

ashwin

இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை விமர்சித்திருக்கும் அஸ்வின், பிசிசிஐ ஒருபோதும் விளையாட்டில் அரசியலை புகுத்தியதில்லை என பாராட்டியுள்ளார். இதுகுறித்து யூடியூப் சேனலில் பேசியிருக்கும் அவர், இந்த விசயத்தில் நான் பிசிசிஐ-க்கு பாராட்டுகளை கொடுக்க விரும்புகிறேன். இதைச் சொன்னால் பலர் அண்ணா நீங்க பிசிசிஐ-க்கு முட்டு கொடுக்கிறீங்க, அணை கட்டுறீங்கனு சொல்லுவாங்க. ஆனால் பிசிசிஐ ஒருமுறை கூட விளையாட்டில் அரசியலை கொண்டுவந்தது கிடையாது. எங்களுக்கு எந்த அழுத்தமும் இருந்தது கிடையாது. பிசிசிஐ எப்போதும் அரசியலையும், விளையாட்டையும் தனி தனியாக பார்த்துள்ளது” என பேசியுள்ளார்.