2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக 35% வாக்குகளுடன் வரலாறு படைத்து, விஜய் முதல்வராக வர உள்ள சூழலில், அரசியல், திரை உலகத்தினருடன் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினும் எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்தார். அதை பகிர்ந்த ஒருவர், அவரை “திராவிட ஆட்சியைக் கண்டு அஞ்சும் பிராமணர்” என சாதி அடிப்படையில் விமர்சித்தது சர்ச்சையை கிளப்பியது.
2026 சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளையும் பின்னுக்குதள்ளியிருக்கும் தவெக கிட்டத்தட்ட 35% சதவீத வாக்குகளை பதிவுசெய்து வரலாறு படைத்துள்ளது. 108 இடங்களில் வெற்றிபெற்றுள்ள விஜய் தலைமையிலான தவெக பெரும்பான்மையை நிரூபிக்கும் பட்சத்தில் தவெக தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்கவிருக்கிறார்.
இந்நிலையில் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினும் விஜய்க்கு வாழ்த்தை பகிர்ந்திருந்தார்.
எக்ஸ் தளத்தில் விஜய்க்கு அஸ்வின் வாழ்த்து தெரிவித்திருப்பதை ஷேர் செய்த நபர் ஒருவர், “திராவிட ஆட்சியைக் கண்டு அஞ்சும் ஒரு பிராமணர்” என்று சாதியை குறிப்பிட்டு விமர்சித்திருந்தார்.
சாதி குறித்து பேசியிருந்த நபருக்கு பதிலடி கொடுத்திருக்கும் கிரிக்கெட் வீரர் அஸ்வின், “நான் எந்த குடும்பத்தில் பிறந்தேன் என்பது என் கையில் இல்லை; ஆனால், நல்ல பெற்றோரிடம் பிறந்தது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். மற்றவர்களின் கஷ்டத்தை புரிந்து கொண்டு, அவர்களின் முன்னேற்றத்திற்கு துணை நிற்பதே தலைமைப்பண்பு என்று என் பெற்றோரும் ஆசிரியர்களும் சொல்லிக் கொடுத்துள்ளார்கள். பிறப்பு, சாதி பற்றி பேசாத ஒரு நிலை வருவதை நான் பார்க்க விரும்புகிறேன்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.