ashwin - kumble
ashwin - kumble Cricinfo
கிரிக்கெட்

35 முறை 5 விக்கெட்கள்; இந்திய மண்ணில் 354 விக்கெட்கள் - அனில் கும்ப்ளே ரெக்கார்டை தகர்த்த அஸ்வின்!

Rishan Vengai

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக ஒரு வரலாற்று வெற்றியை பெற்ற இங்கிலாந்து அணி தொடரை 1-0 என வெற்றிகரமாக தொடங்கியது. ஆனால் அடுத்த இரண்டு போட்டிகளில் கம்பேக் கொடுத்த இந்திய அணி அபாரமான வெற்றியை பதிவுசெய்தது. இளம் வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜுரேலின் அட்டகாசமான ஆட்டத்தால் இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்ற இந்தியா 2-1 என தொடரில் முன்னிலை வகித்துவருகிறது.

ind vs eng

இந்நிலையில் தொடரின் 4வது டெஸ்ட் போட்டியானது முன்னாள் இந்திய கேப்டன் தோனி பிறந்த இடமான ராஞ்சியில் நடந்துவருகிறது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஜோ ரூட்டின் அசத்தலான சதத்தால் 353 ரன்கள் குவித்தது. அதன்பிறகு விளையாடிய இந்திய அணி இங்கிலாந்து ஸ்பின்னர் ஷோயப் பஷீரின் அற்புதமான பவுலிங்கால் 177 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்து தடுமாறியது.

jurel

எப்படியும் இந்தியா இங்கிருந்து 200 ரன்களை எட்டுவதற்குள் ஆல் அவுட்டாகிவிடும் என்றே எல்லோராலும் எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் களத்திலிருந்த இளம் வீரர் துருவ் ஜுரேல் வேறு திட்டத்தை வைத்திருந்தார். ஒரு அபாரமான 90 ரன்கள் ஆட்டத்தால் இந்தியாவை 307 ரன்களுக்கு எடுத்துச்சென்றார் ஜுரேல்.

அஸ்வின், குல்தீப்பால் ஆட்டம் கண்ட இங்கிலாந்து!

இந்தியா 307 அடித்த பிறகு 46 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி, தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. ஒரு பெரிய டோட்டலை இந்தியாவுக்கு எதிராக நிர்ணயிக்கலாம் என களமிறங்கிய இங்கிலாந்து அணியை, டக்கெட், ஒல்லி போப் மற்றும் ஜோ ரூட் மூன்று பேரையும் சொற்ப ரன்களில் வெளியேற்றி கலக்கிப்போட்டார் ரவி அஸ்வின். அவரை தொடர்ந்து பந்துவீச வந்த குல்தீப் யாதவ் நிலைத்து நின்ற ஜாக் கிராவ்லி மற்றும் பென் ஸ்டோக்ஸை அடுத்தடுத்து வீழ்த்த இங்கிலாந்து அணி ஆட்டம் கண்டது.

ashwin

தொடர்ந்து அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அஸ்வின் மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் 5 விக்கெட்டுகள் மற்றும் 4 விக்கெட்டுகள் என வீழ்த்த இங்கிலாந்து அணி 142 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இந்தியா வெற்றிபெற 192 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

35வது முறை 5 விக்கெட்டுகள்!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், இந்தியாவிற்காக அதிகமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த அனில்கும்ப்ளேவின் சாதனையை சமன்செய்துள்ளார்.

அனில்கும்ப்ளே 132 போட்டிகளில் 35 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் நிலையில், 99 போட்டிகளில் தன்னுடைய 35வது 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனையை சமன்செய்துள்ளார் அஸ்வின்.

இந்தியாவுக்காக அதிகமுறை 5 விக்கெட்டுகள் எடுத்தவர்கள்...:

1. அனில் கும்ப்ளே (1990-2008) - 132 போட்டிகள் - 619 விக்கெட்டுகள் - 35 (5 விக்) / 8 (10 விக்)

2. ரவிச்சந்திரன் அஸ்வின் (2011-2023*) - 99 போட்டிகள் - 507 விக்கெட்டுகள் - 35 (5 விக்) / 8 (10 விக்)

3. ஹர்பஜன் சிங் (1998-2015) -103 போட்டிகள் - 417 விக்கெட்டுகள் - 25 (5 விக்) / 5 (10 விக்)

4. கபில் தேவ் (1978-1994) - 131 போட்டிகள் - 434 விக்கெட்டுகள் - 23 (5 விக்) / 2 (10 விக்)

இந்தியாவுக்காக அதிக ஹோம் விக்கெட்டுகள்!

இங்கிலாந்துக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின், இந்திய மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்திய வீரராக மாறி சாதனை படைத்துள்ளார்.

அனில் கும்ப்ளே - அஸ்வின்

சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அனில் கும்ப்ளே 350 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த நிலையில், அஸ்வின் தற்போது 354 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளராக மாறியுள்ளார்.