sachin - rahane pti / bcci
கிரிக்கெட்

ஓய்வை அறிவித்தார் அஜிங்கியா ரஹானே.. புகழ்ந்து பதிவிட்ட சச்சின் டெண்டுல்கர்!

இந்திய அணியின் மாடர்ன் டே சிறந்த வீரர்களில் ஒருவரான அஜிங்கியா ரஹானே அனைத்துவிதமான கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார்.

Rishan Vengai

இந்திய அணியின் அண்டர்ரேட் ஹீரோவாக கருதப்பட்ட அஜிங்கியா ரஹானே, 12 ஆண்டுகள் நீண்ட சர்வதேச கிரிக்கெட் பயணத்திற்கு பின் ஓய்வு அறிவித்துள்ளார். 2020-21 ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை கேப்டனாக வெற்றி பெற்ற அவரது சாதனை, மெல்போர்ன் சதம் உள்ளிட்ட பல முக்கிய இன்னிங்ஸ்கள் காலத்துக்கும் நினைவில் நிற்கும். இந்த பயணத்தை சச்சின் டெண்டுல்கர் பாராட்டி உணர்ச்சி மிகுந்த பதிவை வெளியிட்டுள்ளார்.

இந்திய அணியின் தலைசிறந்த வீரராக உருவாகவேண்டிய பெயர்களில் அஜிங்கியா ரஹானே பெயர் தவிர்க்க முடியாத ஒன்று. அண்டர் ரேட் வீரர் என்ற எடுத்துக்காட்டுக்கு உண்மையான அர்த்தமாக அஜிங்கியா ரஹானே என்ற பெயரே இருக்கக்கூடும். வெளிநாட்டு ஆடுகளங்களில் அட்டாக்கிங் கிரிக்கெட்டை விளையாட துணிந்தது மட்டுமில்லாமல், அதில் வெற்றியும் கண்டவர் என்பதாலேயே அஜிங்கியா ரஹானேவிற்கு என தனி ரசிகர் பட்டாளம் உண்டு.

ரஹானே

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 2020-21 தொடரை கேப்டனாக வென்று கொடுத்த அஜிங்கியா ரஹானேவின் சாதனை காலத்திற்கும் போற்றப்படும். அதிலும் அடிலய்டு டெஸ்ட்டில் 36 ரன்னுக்கு சுருண்டு படுதோல்வியடைந்த பிறகு, இளம் வீரர்கள் கொண்ட ஒரு அணியை வைத்து 2-1 என ஆஸ்திரேலியாவில் தொடரை வெல்வதெல்லாம் பல ஜாம்பவான் கிரிக்கெட்டர்களாலேயே முடியாத காரியமாகும். அதிலும் மெல்போர்ன் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ரஹானே அடித்த சதம் தனி சிறப்பு வாய்ந்தது.

கேப்டனாக இந்திய அணியை 6 போட்டிகளில் வழிநடத்தியிருக்கும் ரஹானே ஒன்றில் கூட தோற்றதில்லை. அதேபோல 12 டெஸ்ட் சதங்கள் அவர் அடித்திருக்கும் ஒரு போட்டியில் கூட இந்திய அணி தோற்றதில்லை.

2011 முதல் 2023 வரை நீடித்த ரஹானேவின் 12 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை, டெஸ்ட் கிரிக்கெட்டில் 85 போட்டிகளில் 38.46 சராசரியில் 12 சதங்களுடன் 5077 ரன்கள், ஒருநாள் கிரிக்கெட்டில் 35.26 சராசரியில் மூன்று சதங்களுடன் 2962 ரன்கள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் 20.83 சராசரியில் 113.29 ஸ்டிரைக் ரேட்டுடன் 375 ரன்களுடன் நிறைவு பெறுகிறது.

இந்நிலையில் ரஹானேவின் கிரிக்கெட் பயணத்தை பாராட்டியிருக்கும் இந்திய கிரிக்கெட்டின் கடவுளாக போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர், “நாம் முதன்முதலில் மும்பை அணிக்காக இணைந்து பேட் செய்தபோது, ​​தருணங்களை ஒருபோதும் துரத்தாத ஒருவரை நான் கண்டேன். அணிக்காகக் கடினமாக உழைக்க நீங்கள் தயாராக இருந்ததால், அந்தத் தருணங்கள் உங்களிடம் வந்தன. அதே குணம்தான் ஆஸ்திரேலியாவில் உங்கள் மிகச்சிறந்த தருணத்தை வரையறுத்தது. நிதானம் என்பது ஆக்ரோஷத்திற்கு எதிரானது அல்ல என்பதை நீங்கள் காட்டினீர்கள். அதுதான் பெரும்பாலும் ஒரு அணிக்கு அச்சமின்றி இருப்பதற்கான நம்பிக்கையை அளிக்கிறது. ஒரு அற்புதமான விளையாட்டு வாழ்க்கைக்கு வாழ்த்துகள்!” என பதிவிட்டுள்ளார்.