இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கம்பேக் கொடுத்த இந்தியா வெற்றிபெற்று தொடரை 1-1 என சமன்செய்துள்ளது.
இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி ஜோ ரூட்டின் சதத்தின் உதவியால் 387 ரன்கள் சேர்த்தது. அபாரமாக பந்துவீசிய பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இங்கிலாந்தை தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணியில், ஜெய்ஸ்வால் 13 ரன், கேப்டன் கில் 16 ரன் மற்றும் சிறப்பாக தொடங்கிய கருண் நாயர் 40 ரன்னும் அடித்து அவுட்டாகினர்.
107 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறிய நிலையில், 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அசத்தினர்.
முதலில் நிதானமாக விளையாடிய இருவரும் பிறகு அதிரடியான ஆட்டத்திற்கு திரும்பினர். இருவரும் அடுத்தடுத்து அரைசதமடித்து அசத்த, இரண்டு வீரர்களுக்கும் சதமடிக்கும் வாய்ப்பு பிரகாசமாகவே இருந்தது.
இந்த சூழலில் உணவு இடைவேளைக்கு செல்ல ஒரு ஓவர் மட்டுமே மீதமிருந்த போது கேஎல் ராகுல் 98 ரன்களில் இருந்தார். அப்போது ஸ்டிரைக்கில் 74 ரன்களுடன் இருந்த ரிஷப் பண்ட், கேஎல் ராகுல் சதமடிக்க வேண்டும் என ஃபார்வர்டில் பந்தை தட்டிவிட்டு ரன்னுக்கு சென்றார். அப்போது கேஎல் ராகுலும் ரன்னுக்கு வர, பந்தை சரியாக நான் ஸ்டிரைக் எண்ட்டில் அடித்த பென் ஸ்டோக்ஸ் ரிஷப் பண்ட்டை அவுட்டாக்கினார். சதமடிக்கும் வாய்ப்பை இழந்த பண்ட் சோகமுகத்துடன் வெளியேறினார்.
உணவு இடைவேளைக்கு பிறகு வந்து சதத்தை பூர்த்தி செய்த கேஎல் ராகுல், அடுத்த ஓவரிலேயே கேட்ச் கொடுத்து 100 ரன்னில் வெளியேறினார். இதைப்பார்க்க ரசிகர்கள் இதுக்காகவா ரிஷப் பண்ட்டை அவுட்டாக்கினீங்க என ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
லார்ட்ஸ் மைதானத்தில் இன்று சதமடித்து அசத்திய கேஎல் ராகுல், லார்ட்ஸ் மைதானத்தில் 2 சதங்கள் விளாசிய தொடக்க வீரர்கள் பட்டியலில் முதல் இந்தியராக தன்னை இணைத்துக்கொண்டார். இச்சாதனையை இதற்கு முன்பு பில் பிரவுன், கோர்டன் கிரீனிட்ஜ், கிரேம் ஸ்மித் முதலிய 3 தொடக்க வீரர்கள் மட்டுமே படைத்திருந்த நிலையில், 4வது தொடக்க வீரராக கேஎல் ராகுல் இணைந்தார்.
அதுமட்டுமில்லாமல் கடந்த 25 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து மண்ணில் அதிக சதங்கள் (4) விளாசிய இரண்டாவது உலக வீரர் என்ற சாதனையையும் படைத்தார். இதற்கு முன்பு கிரீம் ஸ்மித் 5 சதங்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.
அதேபோல இந்த டெஸ்ட் தொடரில் 400 ரன்களை அடித்திருக்கும் ரிஷப் பண்ட், இங்கிலாந்து மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் அதிகரன்கள் அடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்தார்.