ஆப்பிரிக்கக் கோப்பை கால்பந்து போட்டியில் மொரோக்கோவை வீழ்த்திய செனகல், சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.
சர்ச்சை, சண்டை, சமாதானம் எனப் போர்க்களமான ஆப்ரிக்க கோப்பை கால்பந்து போட்டியின் இறுதியாட்டத்தில் செனகல் அணி வெற்றியை வசப்படுத்தி கோப்பையைக் கையிலேந்தியது. ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் மொராக்கோ அணிக்கு வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய பெனால்டி வாய்ப்பால் கொதிப்படைந்த செனகல் வீரர்கள், தங்கள் பயிற்சியாளர் பாப்தியாவ் தலைமையில் மைதானத்தைவிட்டு வெளியேறி அதிரடிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 14 நிமிட நேர தாமதத்திற்குப் பிறகு, நட்சத்திர வீரர் சாடியோ மானேவின் சமரச முயற்சியால் ஆட்டம் மீண்டும் தொடங்கியது. கிடைத்த பொன்னான பெனால்டி வாய்ப்பை மொராக்கோவின் பிராஹிம் டயஸ் வீணடிக்க, ஆட்டம் கூடுதல் நேரத்திற்குச் சென்றது. செனகலின் பாப்குயே மின்னல் வேகத்தில் ஒரு கோல் அடிக்க, ஒன்றுக்கு சுழியம் என்ற கோல் கணக்கில் மொராக்கோவை வீழ்த்தி செனகல் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. ஆப்பிரிக்கக் கால்பந்து வரலாற்றில் ஒரு கருப்புப் பக்கமாகவும், அதேசமயம் ஒருவீர காவியமாகவும் இந்த இறுதிப்போட்டி மாறியுள்ளது.