ஆப்கானிஸ்தான் டெஸ்ட் தொடர் வெற்றி web
கிரிக்கெட்

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை எந்த அணியும் இல்லை.. முதல் ஆசிய அணியாக சாதனை படைத்த ஆப்கானிஸ்தான்!

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றி அசத்தியது ஆப்கானிஸ்தான் அணி.

Rishan Vengai

ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் செய்த ஆப்கானிஸ்தான் அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடியது.

afg vs zim

டி20 தொடரை 2-1 எனவும், ஒருநாள் தொடரை 2-0 எனவும் வெற்றிபெற்று ஆதிக்கம் செலுத்திய ஆப்கானிஸ்தான் அணி, ஜிம்பாப்வேவின் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரையும் 1-0 என வென்று அசத்தியுள்ளது.

7 விக்கெட்டுகள்.. ரஷீத் கானின் தலைசிறந்த பந்துவீச்சு!

இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் 699, ஜிம்பாப்வே 586 ரன்கள் என குவிக்க ஆட்டம் சமன் செய்யப்பட்டது.

இந்த நிலையில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னின்ஸில் 157 ரன்களுக்கு ஆல்அவுட்டான போதும், இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய ரஷீத் கானின் அபார பந்துவீச்சால் 72 ரன்களில் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றது.

போட்டியை பொறுத்தவரையில் முதலிரண்டு இன்னிங்ஸில் ஆப்கானிஸ்தான் 157 மற்றும் 363 ரன்களும், ஜிம்பாப்வே அணி 243 மற்றும் 205 ரன்களும் அடித்தன. இரண்டு இன்னிங்ஸையும் சேர்த்து 11 விக்கெட்டுகளை கைப்பற்றிய ரசீத் கான், 7/66 என ஒரு ஆப்கானிஸ்தான் பவுலராக சிறந்த பந்துவீச்சை பதிவுசெய்தார்.

இந்த வெற்றியின் மூலம் 1-0 என தொடரை வென்று அசத்தியது ஆப்கானிஸ்தான் அணி.

ஆப்கானிஸ்தான் படைத்த சாதனைகள்..

முதல் ஆசிய அணி: தங்களுடைய முதல் வெளிநாட்டு டெஸ்ட் தொடரில் பங்கேற்ற ஆப்கானிஸ்தான் அணி, முதல் வெளிநாட்டு டெஸ்ட் தொடரையே வென்ற முதல் ஆசிய அணியாக சாதனை படைத்துள்ளது.

சிறந்த பந்துவீச்சு: ஒரு ஆப்கனிஸ்தான் பவுலராக சிறந்த டெஸ்ட் பந்துவீச்சை பதிவுசெய்த ரஷீத் கான், 7/66.

2வது சிறந்த அணி: முதல் 11 டெஸ்ட் போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்று இரண்டாவது சிறந்த அணியாக ஆப்கானிஸ்தான் மாறியுள்ளது. முதலிடத்தில் 6 வெற்றிகளுடன் ஆஸ்திரேலியா உள்ளது.

rashid khan

ரஷீத் கான் சாதனை: ஒரு பவுலர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 20 ரன்களுக்கு மேல் அடித்து, 10 விக்கெட்டுகளை வீழ்த்துவது இது 10வது முறையாகும். இதில் இரண்டுமுறை இந்த சாதனையை படைத்த முதல் வீரராக ரசீத் கான் சாதனை.

45 விக்கெட்டுகள்: 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 45 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் ரஷீத் கான், 19ம் நூற்றாண்டில் கிரிக்கெட் விளையாடிய ஆஸ்திரேலியா பவுலர் சார்லி டர்னருக்கு பிறகு இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார். இந்த சாதனையை தென்னாப்பிரிக்கா பவுலர் பிலேண்டருடன் சமன்செய்துள்ளார் ரஷீத் கான்.