afghansitan cricket team PT
கிரிக்கெட்

உலக அரங்கில் மீண்டும் தங்களை நிரூபித்த ஆப்கானிஸ்தான்.. வலிகளுக்கு மத்தியில் ஒரு வெற்றிப்பயணம்!

"கிரிக்கெட் விளையாட்டை நாங்கள் எங்களுக்காக மட்டும் விளையாடவில்லை. எங்கள் நாட்டில் இருக்கும் அனைத்து மக்களுக்காகவும் விளையாடுகிறோம்". இவை சில நாட்களுக்கு முன் ஆப்கானிஸ்தான் வீரர் குர்பாஸ் சொன்ன வார்த்தைகள்.

இர்ஃபாத் சமீத் / Irfath Sameeth

சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.  ஐசிசி தரவரிசை பட்டியலில் முதல் 8 இடங்களை பிடித்திருக்கும் அணிகளுக்கு மட்டுமே இந்த தொடரில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும். முன்னாள் உலக சாம்பியன்களான இலங்கை, மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு கூட  கிடைக்காத வாய்ப்பு ஆப்கானிஸ்தானுக்கு கிடைத்தது.

2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலக கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் அடிப்படையில் இந்த வாய்ப்பு ஆப்கானிஸ்தான் அணிக்கு கிடைத்தது.

இங்கிலாந்துக்கு எதிராக வரலாற்று வெற்றியை பெற்ற ஆப்கானிஸ்தான்..

ஒவ்வொரு ஐசிசி தொடர்களிலும் ஏதாவது ஒரு சிறிய அணி மற்ற அணிகள் அடித்து பழக வசதியாக பங்கேற்கும். அந்த வகையில் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தான் அணி பார்க்கப்பட்டது. அதற்கேற்றாற்போல் கராச்சியில் நடைபெற்ற முதல் போட்டியில் தென் ஆப்ரிக்காவிடம் 107 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது ஆப்கானிஸ்தான்.

இப்ராஹிம் ஜத்ரான்

இந்த தோல்வியுடன் நேற்று லாகூரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொண்டது ஆப்கானிஸ்தான் அணி. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியில்  இப்ராஹிம் ஸர்தான் அதிரடியாக விளையாடி 177 ரன்கள் குவித்தார்.  சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தான் வீரர் குவித்த அதிகபட்ச  ரன்கள் இதுதான். இவருடைய அதிரடியால் ஆப்கானிஸ்தான் அணி 325 ரன்கள் குவித்தது.

afg vs eng

அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணியில் மற்ற வீரர்கள் ஏமாற்றம் கொடுத்தாலும் ஜோ ரூட் மட்டும் வழக்கம் போல தனித்து செயல்பட்டார்.  ஒரு கட்டத்தில் ஜோ ரூட் சதம் அடித்ததும் 2023 உலக கோப்பையில் மேக்ஸ்வெல்லின் ஆட்டம் மீண்டும் திரும்புகிறது என பலரும் நினைத்த நிலையில் 120 ரன்கள் எடுத்திருந்த போது அவரின் விக்கெட்டை வீழ்த்தினார் ஓமர்சாய்.  அதன் தொடர்ச்சி இங்கிலாந்து அணி 317 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

அகதிகள் முகாமில் வளர்ந்த முகமது நபி..

இந்த வெற்றி ஆப்கானிஸ்தான் அணிக்கு அதிர்ஷ்டத்தில் கிடைத்தது என நிச்சயம் யாராலும் சொல்லிவிட முடியாது.  கடைசியாக நடந்த 3 ஐசிசி தொடர்களில் ஆப்கானிஸ்தான் 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் பெரிய அணிகளாக கருதப்படும் இங்கிலாந்து 7 போட்டியிலும், பாகிஸ்தான் 6, வங்கதேசம் 5, இலங்கை 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

இது தவிர கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதுடன் முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது,  2023 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான், இலங்கை போன்ற அணிகளை வீழ்த்தியது, 2024 ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான வெற்றி என தொடர்ச்சியாக இந்த வெற்றிக்கு தாங்கள் தகுதியானவர்கள் என்பதை ஆப்கானிஸ்தான் நிரூபித்துக்கொண்டே இருந்திருக்கிறது.

முகமது நபி

மற்ற சிறிய நாடுகளை விட ஆப்கானின் வெற்றிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கிடைக்க அந்த நாடு இருக்கும் சூழலும் முக்கிய காரணம். தொடர்ந்து போர், வறுமை என பல்வேறு மோசமான சூழல்களுக்கு மத்தியில்தான் ஆப்கானில் கிரிக்கெட் விளையாடப்படுகிறது. இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வயதான வீரராக பார்க்கப்படும் முகமது நபி பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள அகதிகள் முகாமில் வளர்ந்தவர். இப்படி பல வீரர்களும் போர்களின் வலிகளுடன் அகதிகள் முகாம்களில் வளர்ந்தவர்கள்.

வலிகளை கடந்த கிரிக்கெட் பயணம்..

ஒருமுறை பிரபல டென்னிஸ் சாம்பியன் நோவோக் ஜோகோவிச் இப்படியாக சொன்னார். யூகோஸ்லாவியப் போர்களின் கொடூரங்களையும், அது தனது குழந்தைப் பருவத்தில் ஏற்படுத்திய தாக்கம் கொடியது. யாரும் அனுபவிக்க முடியாத மோசமான விஷயம். அடுத்த குண்டு உங்கள் தலையில் விழப் போகிறதா என்று உங்களுக்குத் தெரியாது,. இந்த சூழல்களுக்கு மத்தியில் நான் வளர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த அதிர்ச்சியான குழந்தைப் பருவம் தனது கடினமான வாழ்க்கையை எவ்வாறு வடிவமைத்தது என்பதை குறிப்பிட்டிருந்தார்.

ஜோகோவிச்சைப் போலவே, பல ஆப்கானிஸ்தான் வீரர்களும் போரினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உண்மையில், அவர்களின் போராட்டங்கள் இன்னும் வலிமிகுந்தது. ஆப்கானில் மீண்டும் தாலிபான்கள் வருகைக்குப் பிறகு அங்கு நடக்கும் நிகழ்வுகளின் தாக்கம் எதையும் அவர்களின் ஆட்டங்களில் பாதிக்காத வகையில் ஒவ்வொரு வீரரும் தங்களால் முடிந்த பங்களிப்பை கொடுக்கின்றனர்.  ஆப்கானில் பெண்கள் கிரிக்கெட் தடை செய்யப்பட்ட பிறகு ஏற்பட்ட வெளியுலகு அழுத்தங்கள், ஆஸ்திரேலிய போன்ற நாடுகள் இருதரப்பு போட்டிகளில் விளையாட மறுப்பு தெரிவிப்பது போன்ற புறக்கணிப்புகள், பொருளாதார சவால்கள் போன்ற பல நெருக்கடிகளின் மீதுதான் ஆப்கானிஸ்தானின் வெற்றி வைக்கப்படுகிறது.

afghanistan

ஆப்கானிஸ்தான் அணியின் வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பையும் நிச்சயம் புறந்தள்ளிவிட முடியாது. சர்வதேச கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் முதன்முதலில் கால் பதித்தபோது, ​​உள்கட்டமைப்பு ஒரு பெரிய தடையாக இருந்தது.  ஆனால் ஆப்கானிஸ்தானின் திறனை உணர்ந்த இந்தியா, நொய்டாவிலும் பின்னர் டேராடூனிலும் உள்ள மைதானங்களை தங்கள் சொந்தப் போட்டிகளுக்குப் பயன்படுத்த அனுமதி வழங்கியது. ஆப்கானிஸ்தான் விளையாடிய 200 தொடர்களில் 35 தொடர்கள் இந்தியாவில் நடைபெற்றுள்ளது. இதுதவிர இந்தியாவைச் சேர்ந்த பயிற்சியாளர்கள், மருத்துவர்கள் போன்ற பல துறை நிபுணர்களும் ஆப்கான் வீரர்களுடன் தொடர்ச்சியாக செயல்பட்டு வந்துள்ளனர். 2017ஆம் ஆண்டு முதல் அனைத்து சர்வதேச போட்டிகளையும் தங்கள் நாட்டில் நடத்தும் அளவுக்கு ஆப்கான் முன்னேறியிருக்கிறது.

2012 ஆம் ஆண்டு முதல்முறை ஐசிசி தொடர்களுக்குள் ஆப்கான் நுழைந்தபோது இங்கிலாந்து அணிக்கு எதிராக மோசமாக தோல்வியை சந்தித்தது. 13 வருடங்கள் கழித்து இங்கிலாந்துக்கே சவால் கொடுக்கும் நிலைக்கு வளர்ந்திருக்கிறது ஆப்கான்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி

2024 டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய பிறகு பேசிய ரஷீத் கான் "எங்களின் வெற்றி ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுக்கிறது.  கிரிக்கெட்தான் எங்கள் மக்களுக்கான ஒரே சந்தோஷம். அவர்களுக்கு அந்த சந்தோஷத்தை எங்களால் கொடுக்க முடிவதில் மகிழ்ச்சி. நான் விக்கெட்டுகள் எடுப்பதைவிட எங்கள் மக்கள் தெருக்களில் கொண்டாடி மகிழும்போது அவர்களின் முகத்தில் இருக்கும் சிரிப்பே எனக்கு பெரும் திருப்தியைக் கொடுக்கிறது" என்றார்.

நேற்றைய வெற்றியும் ஆப்கான் மக்களுக்கு போர், உள்நாட்டு புரட்சி, ஆட்சி மாற்றம், கட்டுப்பாடுகள் இவற்றை கடந்து நிச்சயம் மகிழ்ச்சியை கொடுத்திருக்கும் .