india a x page
கிரிக்கெட்

ACC Mens AsiaCup | சூப்பர் ஓவர் வரை சென்ற ஆட்டம்.. ரன்னே எடுக்காமல் வீழ்ந்தது இந்தியா ஏ! BAN வெற்றி

ஏசிசி ஆண்கள் ஆசியக் கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் 2025 தொடரின் இன்றைய அரையிறுதிப் போட்டியில், இந்திய ஏ அணி தோல்வியைத் தழுவியது.

Prakash J

ஏசிசி ஆண்கள் ஆசியக் கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் 2025 தொடரின் இன்றைய அரையிறுதிப் போட்டியில், இந்திய ஏ அணி தோல்வியைத் தழுவியது.

ஏசிசி ஆண்கள் ஆசியக் கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் 2025 தொடர் கத்தாரில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இந்தியா ஏ, ஆப்கானிஸ்தான் ஏ, இலங்கை ஏ, வங்கதேசம் ஏ, ஓமன், ஹாங்ஹாங், ஐக்கிய அரபு, பாகிஸ்தான் ஷாகீன்ஸ் ஆகிய 8 அணிகள் இரண்டு பிரிவுகளாகப் பங்கேற்றன. இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள இந்த தொடரில் அரையிறுதிக்கு இந்திய ஏ, இலங்கை ஏ, வங்கதேசம் ஏ, பாகிஸ்தான் ஷாகீன்ஸ் ஆகிய அணிகள் தகுதி பெற்றன. அந்த வகையில் இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய ஏ அணியும், வங்கதேச ஏ அணியும் பலப்பரீட்சை நடத்தின.

india a

இதில் டாஸ் ஜெயித்த இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த வங்கதேச அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது. அவ்வணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் ரஹ்மான் சோகன் 65 ரன்களும், மெக்ராப் ஆட்டமிழக்காமல் 48 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஜோடிகளான வைபவ் சூர்யவன்ஷியும் பிரியன்ஷ் ஆர்யாவும் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். வைபவ் 15 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து வெளியேற, ஆர்யா 23 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். கேப்டன் ஜிதேஷ் சர்மா மற்றும் நேகல் வதேதரா பொறுப்புணர்ந்து ஆடினர். அவர்கள் இருவரும் 33 மற்றும் 32 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த வீரர்களும் வெற்றிக்காகப் போராடினர்.

ஒருகட்டத்தில் கடைசி ஒரு பந்தில் வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், அந்த ஒரு பந்தில் வெறும் 3 ரன்கள் மட்டுமே கிடைத்தது. இதனால் ஆட்டம் டையில் முடிவடைந்தது. இதையடுத்து சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.

சூப்பர் ஓவரில் கேப்டன் ஜிதேஷ் சர்மாவும், அஷ்யுதோஷ் சர்மாவும் அடுத்தடுத்து அவுட்டாகினர். சூப்பர் ஓவரில் இரண்டு விக்கெட்களை இழந்ததால் இந்திய அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்து, வங்கதேச அணிக்கு வெற்றி இலக்காக 1 ரன் நிர்ணயிக்கப்பட்டது. அதிலும் வங்கதேச அணி, ஒரு விக்கெட்டை இழந்து தடுமாறிய நிலையில், இறுதியில் வைடு மூலம் அந்த 1 ரன்னை எடுத்து வெற்றிபெற்றது. இதன்மூலம் வங்கதேச ஏ அணி இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்திய ஏ அணி தோல்வி அடைந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.