2024-2025 விஜய் ஹசாரே கோப்பை தொடரானது டிசம்பர் 21 முதல் தொடங்கி அடுத்தாண்டு ஜனவரி 18ம் தேதிவரை நடைபெறுகிறது. 38 அணிகள் பங்கேற்கும் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரானது டிசம்பர் 21-ம் தேதியான இன்றுமுதல் தொடங்கப்பட்டுள்ளது.
இன்று முதல்சுற்று போட்டிகள் நடந்த நிலையில், டெல்லி அணியானது பெங்கால் அணியை எதிர்கொண்டு விளையாடியது.
பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி விக்கெட் கீப்பர் அனுஜ் ராவத்தின் 79 ரன்கள் ஆட்டத்தால் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் சேர்த்தது.
273 ரன்கள் இலக்குடன் விளையாடிய பெங்கால் அணியில் தொடக்கவீரராக களமிறங்கிய அபிஷேக் போரல் 18 பவுண்டரிகள், 7 சிக்சர்களுடன் 130 பந்துகளுக்கு 170 ரன்கள் அடித்து நாட் அவுட்டுடன் போட்டியை முடித்துவைத்தார். 41.3 ஓவரில் 274 ரன்களை சேர்த்த பெங்கால் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவுசெய்தது.
2024 ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடிய 22 வயதான அன்கேப்டு வீரரான அபிஷேக் போரல், 2025 ஐபிஎல் தொடரில் 4 கோடிக்கு தக்கவைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.