2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டிக்கு முன், 15 வயது அதிசய திறமை வைபவ் சூர்யவன்ஷி மற்றும் ஜீனியஸ் பும்ரா மோதல் குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா, இந்த மோதல் குறித்து மிகப்பெரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
2026 ஐபிஎல் தொடரானது கடந்த மார்ச் 28ஆம் தேதி முதல் தொடங்கி பரபரப்பாக நடந்துவருகிறது. ஒருபக்கம் 5 கோப்பைகளை வென்ற OG சாம்பியன் அணிகளான மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே, மறுபக்கம் நடப்பு சாம்பியனான ஆர்சிபி மற்றும் கடந்தமுறை இறுதிப்போட்டியில் கோப்பையை தவறவிட்ட பஞ்சாப் கிங்ஸ் என போட்டி இந்தமுறை வலுவானதாக இருக்கிறது.
இந்நிலையில் இன்றைய போட்டியில் அடுத்தடுத்த 2 வெற்றிகளுக்கு பிறகு வரும் ராஜஸ்தான் அணியும், ஒரு தோல்வி, ஒரு வெற்றியுடன் வரும் மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த போட்டியில்ல் 15 வயது இளம் திறமையான வீரர் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் பும்ரா உடனான மோதல் எப்படி இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருந்துவருகிறது.
போட்டிக்கு முன்னதாக தன்னுடைய யூடியூப் சேனலில் பேசியிருக்கும் முன்னாள் இந்திய வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா, ”ஒரு பக்கம் ஜீனியஸ் பும்ரா, மறுபக்கம் அடுத்த தலைமுறையின் நட்சத்திர வீரர், அதிசய குழந்தை வைபவ் சூர்யவன்ஷி . அவர்கள் இருவரும் நேருக்கு நேர் மோதப் போகிறார்கள். கடைசியாக அவர்கள் மோதியபோது, பும்ராவின் தேவை இருக்கவில்லை. தீபக் சாஹர் அவரை ரன் ஏதும் எடுக்கவிடாமல் ஆட்டமிழக்கச் செய்திருந்தார்.
ஆனால் தற்போது அவருக்கு எதிராக மும்பை என்ன செய்யப்போகிறது. என்னை பொறுத்தவரை பும்ரா அவருக்கு எதிராக தொடக்கத்தில் பந்துவீச மாட்டார் என்று நினைக்கிறேன். ஒருவேளை 15 வயது சிறுவனை சமாளிக்க உங்களுடைய பிரம்மாஸ்திரமான பும்ராவை களமிறக்கினால், நான் அவருக்கு தலை வணங்குவேன்” என்று பேசியுள்ளார்.
அதேநேரத்தில் சூர்யவன்ஷிக்கு எதிராக டிரெண்ட் போல்ட் எஃபக்டிவாக இருப்பார் என்றும், ஃபுல் லெந்தில் வீசப்படும் அவுட்ஸ்விங் டெலிவரியில் சூர்யவன்ஷி சிக்கக்கூடும் என்றும் கூறியுள்ளார்.