நியூலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகவும் உள்ள கேன் வில்லியம்சன் அனைத்து வடிவிலான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். இதன்மூலம், அவரின் 16 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வந்திருக்கிறது.
தனது ஓய்வு குறித்து வெளியிட்டுள்ள கேன் வில்லியம்சனின் பதிவில், ”சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இந்த முடிவை எடுப்பது எனக்கு கடினமாக இருந்தது. கடந்த சில காலமாக இது குறித்து நான் எண்ணியது உண்டு. ஆனால், கடந்த சில நாட்களாக இதுதான் சரியான நேரம் என கருதுகிறேன். நியூசிலாந்து அணிக்காக விளையாடிய ஒவ்வொரு கணமும் பொன்னானது. நியூசிலாந்து கிரிக்கெட்டின் எதிர்காலம் நல்ல கைகளில் இருக்கிறது என்று நான் முழுமையாக நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
35 வயதாகும் கேன் வில்லியம்சனின் முதல் சர்வதேச போட்டி 2010ம் ஆண்டு நடைபெற்றது. அன்று முதல் ஒருநாள் போட்டி, டெஸ்ட், டி-20 உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் 19,346 ரன்கள் எடுத்துள்ளார். குறிப்பாக, சர்வதேச போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த நியூசிலாந்து வீரர் என்ற பெருமையும் கேன் வில்லியம்சனிடமே இருக்கிறது. இந்தசூழலில் தான், கேன் வில்லியம்சனின் ஓய்வு கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தசூழலில் தான், கேன் வில்லியம்சன் ஓய்வு குறித்து விராட்கோலி வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. அப்பதிவில், ”எதிரணியாக இருந்து நண்பராக மாறி பல ஆண்டுகள் ஒன்றாக பயணம் செய்துள்ளோம். நீங்கள் பேட்டிங்க் செய்வதை பார்க்கவும், உங்களுக்கு எதிராக விளையாடியதும் மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், அதைவிட நாம் பல நேரங்களில் பகிர்ந்து கொண்டுள்ள கருத்துக்களை நான் பெரிதும் மதிக்கிறேன். உங்களுக்கு எல்லாமே சிறப்பாக அமைய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
விராட்கோலியும் கேன் வில்லியம்சனும் கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற 19-வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பையில் விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.