ஹர்திக் பாண்டியா pt
கிரிக்கெட்

’இந்தியாவின் பொக்கிஷம் ஹர்திக்..’ ஏன் தலைசிறந்தவர்? 7 சம்பவங்கள்!

இந்தியாவிற்காக போட்டியை வெல்லவேண்டும் என்ற வெறி, எந்த இடத்திலிருந்தும் என்னால் வெற்றியை தேடித்தர முடியும் என்ற அதீத நம்பிக்கை, நான் என்னுடைய திறமையால் தலைசிறந்தவன் என்ற திமிரு எல்லாம் கபில்தேவிற்கு பிறகு ஹர்திக் பாண்டியாவிடம் இருக்கிறது..

Rishan Vengai

கண்ணுல ஃபையரு, நெஞ்சுல திமிரு என்ற வசனத்திற்கு சொந்தக்காரர்களாக இந்திய கிரிக்கெட்டில் தடம்பதித்தவர்களை விரல்களை விட்டு எண்ணி சொல்லிவிடமுடியும்..

கபில் தேவ்

ஒன்றுமே இல்லாமல் இருந்த இந்திய கிரிக்கெட்டிற்கு உயிர் கொடுத்த கபில்தேவ், இறக்கும் தருவாயில் இருந்த இந்திய கிரிக்கெட்டுக்கு மறு உயிர் கொடுத்த சவுரவ் கங்குலி, இந்தியாவை உலக கிரிக்கெட்டே அண்ணாந்து பார்க்க வைத்த எம்எஸ் தோனி, நோய்வாய் பட்டாலும், காயத்தில் நிற்கமுடியாத நிலைமை ஏற்பட்டாலும் அணிக்காக உயிரைகொடுத்து நின்ற யுவராஜ் சிங், உலகின் எந்தமூலையிலும் எங்களால் வெல்லமுடியும் என்ற மிடுக்கை ஏற்படுத்திய கிங் கோலி போன்ற பல மேட்ச் வின்னர்களை இந்திய கிரிக்கெட் வரலாறு கண்டுள்ளது.

ஹர்திக் பாண்டியா

ஆனால் கபில்தேவ் என்ற தலைசிறந்த ஆல்ரவுண்டரை 50 ஆண்டுகளுக்கு முன்பு கண்ட இந்திய கிரிக்கெட் தற்போது தான் அதேபோலான ஒரு வீரரை கண்டுபிடித்துள்ளது. ஏன் ஹர்திக் பாண்டியா தலைசிறந்தவர்? அப்படி என்ன அவர் கபில்தேவிற்கு நிகராக செய்துவிட்டார் என்ற கேள்வி எழலாம்.. ஆனால் கபில்தேவ் விட்டுச்சென்ற இந்திய ஆல்ரவுண்டர் என்ற தடத்தில் புதிய புத்துணர்ச்சியை ஏற்படுத்திய ஒரே வீரராக ஹர்திக் பாண்டியா தான் நீடிக்கிறார். அவர் செய்த சில தரமான சம்பவங்களை இங்கே பார்க்கலாம்..

2017 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனல்

’அவர் மட்டும் அன்னைக்கு இருந்திருந்தா நிலைமையே வேற..’ என இந்திய ரசிகர்களின் அதிகப்படியான நம்பிக்கையை சம்பாதித்தவர்களில் சமகாலத்தில் தோனிக்கு பிறகு, ஹர்திக் பாண்டியாவின் பெயரே இடம்பிடித்திருக்கிறது. அதற்கு 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி ஒரு தரமான சான்று..

’பச்சை சட்டை போட்டாலே அடிப்போம்’ என்ற மிடுக்குடன் திரிந்த இந்திய ரசிகர்களின் நம்பிக்கையை எல்லாம் சுக்குநூறாக உடைத்தது பாகிஸ்தான் அணி. ஐசிசி இறுதிப்போட்டியில் 339 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை இந்தியாவிற்கு நிர்ணயித்தது பாகிஸ்தான் அணி.

ஹர்திக் பாண்டியா

சேஸிங்கில் ரோகித் சர்மா, விராட் கோலி, யுவராஜ் சிங், எம்எஸ் தோனி என்ற பெரிய பெயர்கள் இடம்பெற்றாலும், 0, 5, 4 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். நம்பிக்கை மொத்தமாக பொய்த்துபோன நிலையில், ஹர்திக் பாண்டியா எனும் ஒரு வீரன் மட்டும் களத்தில் நின்று தனியாளாக போராடுகிறான். பாகிஸ்தான் அணி அவர்களிடம் இருந்த வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு என்ற அத்தனை அஸ்திரங்களையும் களத்தில் இறக்கினாலும் சிக்சர், பவுண்டரி என பறந்துகொண்டே இருக்கிறது. 6 சிக்சர்கள் 4 பவுண்டரிகள் என விளாசி திமிருடன் நின்றுகொண்டிருந்த ஹர்திக் பாண்டியாவிற்கு எதிராக பாகிஸ்தானின் அத்தனை யுக்திகளும் வீணாய்ப்போகின..

துரதிருஷ்டவசமாக ரன்அவுட் மூலம் வெளியேறினார் ஹர்திக் பாண்டியா. இந்தியாவை பாகிஸ்தானிடம் தோற்க விட்டுவிடக்கூடாது என்று அவர் கண்ணில் இருந்த நெருப்பு, அவர் ரன் அவுட்டாகி விரக்தியில் கத்திக்கொண்டே வெளியேறியபோது ரசிகர்கள் அனைவரிடமும் பிரதிபலித்தது.. அப்படியான ஒரு தாக்கத்தை ஹர்திக் பாண்டியாவால் மட்டும் தான் உருவாக்க முடியும்.. 2023 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஹர்திக் இருந்திருந்தால் இந்தியா உலகக்கோப்பை வென்றிருக்கும் என்ற நம்பிக்கை 100-ல் 99% சதவீத இந்திய ரசிகர்களுக்கு இன்றும் அசையாமல் இருக்கிறது.

IND vs BAN - பரபரப்பான ஃபைனல் ஓவர்

2007 ஒருநாள் உலகக்கோப்பையில் வங்கதேசம் இந்தியாவிற்கு மறக்கமுடியாத, ஆறவே ஆறாத ஒரு காயத்தை ஏற்படுத்திச் சென்றது. அப்போதிலிருந்து வங்கதேசத்துக்கு எதிரான ஒவ்வொரு போட்டியிலும் இந்திய வீரர்கள் அனல்பறக்கும் ஆட்டத்தையே வெளிப்படுத்துவார்கள். அதிலும் குறிப்பாக மகேந்திர சிங் தோனி எப்போதும் வங்கதேச வீரர்களின் பந்துவீச்சை சிதறடிப்பதில் எந்தவித கருணையும் காட்டியதே இல்லை. அந்தவரிசையில் தோனியுடன் கைக்கோர்த்து ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் செய்த சம்பவம் தான் காலத்திற்கும் மறக்கமுடியாத வெற்றியை பரிசளித்தது.

ஹர்திக் பாண்டியா

2007 உலகக்கோப்பைக்கு பிறகு, 2016 உலகக்கோப்பையிலும் ஒரு மிகப்பெரிய அப்செட்டை தரும் இடத்தில் தான் வங்கதேச அணி இருந்தது. அந்தப்போட்டியில் எப்படியும் இந்திய அணி தோல்விதான் பெறப்போகிறது என்று நினைத்து தூங்க சென்ற இந்திய ரசிகர்களுக்கு, மறுநாள் காலையில் பெரிய சர்ப்ரைஸை வைத்திருந்தார் ஹர்திக் பாண்டியா.

கடந்த 2016 டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 10 சுற்று போட்டியில் இந்தியா 146 ரன்களை அடிக்க, வங்கதேசம் 19வது ஓவர் முடிவில் 136/6 என்ற வலுவான நிலையில் இருந்தது. இறுதி ஓவரில் 11 ரன்களை கட்டுப்படுத்த வேண்டிய நிலையில் ஹர்திக் பாண்டியா பந்துவீசினார். முதல் 3 பந்தில் 2 பவுண்டரிகளை விரட்டிய வங்கதேசம் 9 ரன்களை அடித்து அதிர்ச்சி கொடுத்தது. கடைசி 3 பந்துக்கு 2 ரன்கள் மட்டுமே தேவையாக மாற, இந்திய தோற்கப்போகிறது என ரசிகர்கள் விரக்தியில் டிவி, மொபைலை எல்லாம் அனைத்துவிட்டு சென்றுவிட்டனர்..

ஆனால் அழுத்தமான நேரத்திலும் கடைசி 3 பந்தையும் ஹர்திக் சிறப்பாக வீச 3 விக்கெட்டுகளை பறிகொடுத்த வங்கதேசம் ஒரு ரன்னை கூட அடிக்க முடியாமல் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.. இப்படி இந்தியாவின் அழுத்தம் நிறைந்த தருணத்தில் எல்லாம் காப்பானாக இருந்துள்ளார் ஹர்திக் பாண்டியா..

இங்கிலாந்து மண்ணில் 5 விக்கெட்டுகள்

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 2018 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு மறக்கமுடியாத ஒரு தோல்வியை பரிசளித்தது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என இங்கிலாந்து வென்றிருந்தாலும் நாட்டிங்காமில் ஹர்திக் பாண்டியா அளித்த படுதோல்வி எப்போதும் வரலாற்றில் இடம்பிடித்திருக்கும்.

இங்கிலாந்தில் ஹர்திக் பாண்டியா

3வது டெஸ்ட்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலிரண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற திமிரில் இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது.. முதல் இன்னிங்ஸில் விராட் கோலி மற்றும் ரஹானேவின் அபாரமான ஆட்டத்தால் 329 ரன்களை குவித்தது இந்திய அணி.

ஹர்திக் பாண்டியா

இரண்டாவது பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியை வெறும் 38 ஓவரில் 161 ரன்னில் சுருட்டி எறிந்தது இந்திய அணி. அதிலும் வெறும் 6 ஓவர்களை மட்டுமே வீசிய ஹர்திக் பாண்டியா இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ உட்பட 5 பேரின் விக்கெட்டை சாய்த்தார். 6 ஓவரில் 5/28 என சிறந்த டெஸ்ட் பவுலிங்கை வீசிய ஹர்திக் பாண்டியா இங்கிலாந்து மண்ணில் ஒரு தரமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

தென்னாப்பிரிக்காவில் சிறந்த ஆட்டம்

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியாவின் திறமை சரியாக பயன்படுத்தப்படவில்லை என்பதற்கு மற்றொரு சான்று 2018-ல் தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி.

ஹர்திக் பாண்டியா

தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்திருந்த இந்திய அணி கேப் டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவதாக பேட்டிங் செய்தது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 286 ரன்கள் அடித்த நிலையில், இரண்டாவதாக பேட்டிங் செய்த இந்தியா 81 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது..

அத்தனை ஸ்டார் பேட்டர்களும் தடுமாறிய அந்தப்போட்டியில் 7வது வீரராக களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 14 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 95 பந்தில் 93 ரன்கள் விளாசினார். 2.30 மணிநேரம் களத்தில் நின்ற ஹர்திக் பாண்டியா தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சுக்கு மிகப்பெரிய சவாலை கொடுத்தார். தென்னாப்பிரிக்கா மண்ணில் அப்படியொரு ஆட்டத்தை லோயர் ஆர்டர் இந்திய பேட்டர் ஒருவர் அதுவரை ஆடியதில்லை..

2024 உலகக்கோப்பை ஃபைனல்

2023 ஒருநாள் உலகக்கோப்பையில் ஏற்பட்ட காயத்தால் இறுதிப்போட்டியை தவறவிட்ட ஹர்திக் பாண்டியா, தவறிப்போன உலகக்கோப்பையை இந்தியாவிற்கு பெற்றுத்தர 2024 டி20 உலகக்கோப்பையில் களம்கண்டார்..

30 பந்தில் 30 ரன்கள் மட்டுமே தேவை களத்தில் அதிரடி வீரர்கள் க்ளாசன் மற்றும் டேவிட் மில்லர் இருவரும் இருக்கிறார்கள், எப்படியும் தென்னாப்பிரிக்காவே வெற்றிபெறும் என்ற நிலையே இருந்தது. ஆனால் அழுத்தமான நேரத்தில் பிரிலியண்ட்டாக பந்துவீசிய ஹர்திக் பாண்டியா, முக்கியமான தருணத்தில் க்ளாசன் மற்றும் டேவிட் மில்லர் விக்கெட்டுகளை கைப்பற்றி இந்தியாவை 17 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலகக்கோப்பையை பெற்றுத்தார். மேலும் 11 ஆண்டுகளாக கோப்பை வெல்லாத இந்தியாவின் வரட்சியை முடிவுக்கு கொண்டுவந்தார்.

அதற்குமுன்பு வரை ஹர்திக் பாண்டியாவின் திறமை மீது நம்பிக்கையை இழந்திருந்த ரசிகர்களுக்கு, தான் எப்படியான வீரர் என்பதை மீண்டும் உலகிற்கு பறைசாற்றினார் குங்ஃபூ பாண்டியா.. உலகக்கோப்பை வெற்றிப்பெற்ற தருணத்தில் ஹர்திக் பாண்டியா கண்ணீர் சிந்தியபோது ‘நீ ஜெயிட்ட பாண்டியா’ என்ற எண்ணமே அனைத்து ரசிகர்களின் நெஞ்சிலும் எழுந்தன.

ஹர்திக் பாண்டியா கமிட்மெண்ட்

இந்திய அணிக்காக வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற வெறி, ஆக்ரோசம், விடாமுயற்சி பல முன்னாள் வீரர்களிடம் இருந்தது. அது தற்போதைய இந்திய அணியில் இல்லையோ என்ற கேள்வி எழுகிறது. விராட் கோலியை கடந்து இந்திய அணியில் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற வெறி, ஆக்ரோசம் ஹர்திக் பாண்டியாவிடம் நாம் பலநேரங்களில் பார்த்திருக்கிறோம். இளம் வீரர்கள் இவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயங்களில் இதுவும் ஒன்று.

காயத்துடன் பந்துவீசிய ஹர்திக் பாண்டியா

இந்திய அணிக்காக மட்டுமில்லாமல் தான் வளர்ந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒருமுறை ஹர்திக் பாண்டியா காட்டிய கமிட்மெண்ட் எப்போதும் மறக்கமுடியாதது.

2016 மற்றும் 2017ஆம் ஆண்டு தடைக்குபிறகு 2018ஆம் ஆண்டு ஐபிஎல்லில் கம்பேக்கொடுத்த சிஎஸ்கே அணி, முதல் போட்டியிலேயே மும்பை இந்தியன்ஸை எதிர்கொண்டு விளையாடியது. அதில் ட்வைன் பிராவோவின் அசாதாரணமான பேட்டிங்கால் சிஎஸ்கே 1 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவுசெய்தது.

அந்தப்போட்டியில் காயத்தால் அவதிப்பட்டபோதும் பந்துவீசிய ஹர்திக் பாண்டியா 4 ஓவரில் 24 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தார். கடைசி 3 ஓவரில் 47 ரன்கள் அடிக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்தது சென்னை அணி. வெற்றியை உறுதிசெய்துவிட்டு களத்திலிருந்து வெளியேறிய ஹர்திக் பாண்டியாவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது.

18, 19வது ஓவர்களில் 20, 20 ரன்களை பறக்கவிட்ட ட்வைன் பிராவோ பும்ராவிற்கு எதிராக 3 சிக்சர்களை பறக்கவிட்டார். ஒவ்வொரு சிக்சர் அடிக்கும்போதும் ஹர்திக் பாண்டியா கத்தியபடி அருகிலிருந்த சேரை குத்தி விரக்தியை வெளிப்படுத்தினார். தன்னுடைய அணிக்காக அனைத்தும் கொடுக்கும் அந்த இளைஞன் உடைய கமிட்மெண்ட் தான், தற்போது இந்திய அணிக்கு 2 கோப்பைகளை வென்றுக்கொடுக்க முக்கிய காரணமாக இருந்துள்ளது. இந்திய அணியில் இதேபோன்ற கமிட்மெண்ட்டை முதல் உலகக்கோப்பை வென்ற கேப்டன் கபில்தேவிடம் பார்த்திருக்கிறோம்.

ஹர்திக் பாண்டியா எனும் பொக்கிஷம்

பல ஆண்டுகளாக பவுலிங் ஆல்ரவுண்டரை தேடிக்கொண்டிருந்த இந்திய அணிக்கு பொக்கிஷமாக வந்துசேர்ந்தார் ஹர்திக் பாண்டியா. இந்திய கிரிக்கெட் அணியில் ஹர்திக் பாண்டியா என்ற ஒரு வீரர் இல்லை என்றால் அணி சம பலத்தை இழக்கிறது. அவரால் மட்டுமே அணி முழுமை பெறுகிறது, அவர் இல்லாத நேரங்களில் அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு இரண்டு வீரர்களை இந்தியா தேடவேண்டியிருக்கிறது..

ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா 2026 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடினால் அது இன்னொரு உலகக்கோப்பையை இந்தியா தூக்குவதற்கு உத்திரவாதமாக அமையும் என்றால் பொய்யில்லை.. பேட்டிங், பவுலிங் இரண்டிலும் கைக்கொடுத்து காப்பானாக இருக்கும் ஹர்திக் பாண்டியா இந்திய கிரிக்கெட்டின் பொக்கிஷம்..